தேவதானம் பகுதியை சித்தூர் வார்டில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தேவதானம் பகுதியை சித்தூர் வார்டில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொட்டியம் பேரூராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூரட்சிக்குட்பட்ட 6–வது வார்டை சேர்ந்த தேவதானம் பகுதி சீனிவாசநல்லூர் ஊராட்சிக்கு மிக அருகிலும் தொட்டியத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் தனித்தீவு போல உள்ளது. சீனிவாசநல்லூர் ஊராட்சி மகேந்திரமங்கலத்திற்கு சென்று தான் தேவதானத்திற்கு செல்ல வேண்டும். இங்கு 75–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தற்போது வார்டு மறுசீரமைப்பில் தேவதானம் பகுதி புதியதாக உருவாக்கபட்ட 15–வது வார்டு சித்தூர் பகுதிக்கு மாற்றியமைப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் வாக்குசாவடி போன்றவற்றிக்கு தேவதானத்தில் இருந்து சித்தூருக்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டும் என்பதால் இதை மறு பரிசீலனை செய்து அருகில் உள்ள சீனிவாசநல்லூர் ஊராட்சியில் இணைக்கவேண்டும். இல்லையென்றால் மீண்டும் முன்பு இருந்தது போல் தொட்டியம் பகுதி வார்டிலேயே சேர்க்கவேண்டும் என வலியுறுத்தி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தொட்டியம் பேரூராட்சி நிர்வாக அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.
ஆனால் அதிகாரி இல்லாததால் இதற்கு முடிவு தெரியும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து கோரிக்கை மனுவை கொடுங்கள், கலெக்டருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.