போக்குவரத்து தொழிலாளர்கள் நெல்லையில் வேலைநிறுத்தம்: 2–வது நாளாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை


போக்குவரத்து தொழிலாளர்கள் நெல்லையில் வேலைநிறுத்தம்: 2–வது நாளாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 6 Jan 2018 2:45 AM IST (Updated: 6 Jan 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நெல்லையில் 2–வது நாளாக நேற்று பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை.

நெல்லை,

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நெல்லையில் 2–வது நாளாக நேற்று பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் தனியார் பஸ்கள், வேன்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

வேலைநிறுத்தம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நெல்லை கோட்டத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 2–வது நாளாக போராட்டம் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை கோட்டத்தில் மொத்தம் 18 பணிமனைகள் உள்ளன. இதில் நெல்லை மாவட்டத்தில் 11 பணிமனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும் உள்ளன. மொத்தம் உள்ள 999 பஸ்களில் 400 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

பொதுமக்கள் அவதி

நெல்லை கோட்டத்தில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே நேற்று காலையில் இயங்கின. மதியத்துக்கு பிறகு 40 சதவீத பஸ்கள் இயங்கின. நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் உள்ள 654 பஸ்களில் 264 பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

நெல்லை கோட்டத்தில் உள்ள பெரும்பாலான பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. சில டிரைவர்கள் பஸ்சை இயக்க வந்தனர். அவர்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்கு செல்லவேண்டாம் என்று கூறி தடுத்து நிறுத்தினர். அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பஸ்களை இயக்கினர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நெல்லையில் இருந்து நாகர்கோவில், மதுரை, திருச்சி, கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. கிராமங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இயங்கவில்லை. நெல்லை சந்திப்பில் இருந்து கங்கைகொண்டான், மேலசெவல், சிவந்திப்பட்டி, ஆழ்வார்கற்குளம், காசியாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வெறிச்சோடிய பஸ்நிலையங்கள்

நெல்லை புதிய பஸ்நிலையம், சந்திப்பு பஸ்நிலையங்களில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. நெல்லை மாநகர பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கியதால் பொதுமக்கள் மாநகர பகுதிகளில் பயணம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பை, வள்ளியூர், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு வருபவர்கள் ரெயில்களில் வந்தனர். இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் தனியார் பஸ்கள், வேன்கள், மினிபஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆலங்குளத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட தனியார் மினிபஸ்களிலும், வேன்களிலும் ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இதேபோல் நெல்லை, ஆலங்குளம், தென்காசி உள்ளிட்ட ஊர்களில் இருந்து கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்பட்டன. அதிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

50 சதவீதத்துக்கு...

இந்த நிலையில் அ.தி.மு.கவினர், போக்குவரத்து கழக பொதுமேலாளர் கோமதி செல்வகுமாரை சந்தித்து, தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களை வைத்து பஸ்களை இயக்குங்கள் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து பொதுமேலாளர் கூறுகையில், நெல்லை கோட்டத்தில் காலையில் 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவையான அளவுக்கு டிரைவர்கள் உள்ளனர் என்றார்.

தென்காசி

தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 68 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. காலையில் இருந்தே பஸ்கள் ஓடவில்லை. நேரம் ஆக ஆக சில பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 32 பஸ்கள் ஓடின. புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ்நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் தென்காசியில் இருந்து நெல்லைக்கு சென்ற ரெயிலில் சென்றனர்.

இதேபோல் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 75 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. ஒருசில பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தள்ளுமுள்ளு

சங்கரன்கோவில் பணிமனையில் உள்ள 65 பஸ்களில் நேற்று காலை 11 பஸ்கள், அண்ணா தொழிற்சங்கம் மூலம் இயக்கப்பட்டது. மதியம் பஸ்சை இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அ.தி.மு.க. நிர்வாகிகள் பணிமனையின் உள்ளே சென்று பஸ்சை இயக்க முயன்றனர். இதற்கு தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் அனைத்து கட்சியினரையும் பணிமனையில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story