உடுமலை அருகே தங்கம்மாள் ஓடையில் நுரையுடன் கழிவுநீர் செல்வதால் விவசாயிகள் கவலை
உடுமலை அருகே தங்கம்மாள் ஓடையில் நுரையுடன் செல்லும் கழிவுநீரை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம்,
உடுமலையில் விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த தங்கம்மாள் ஓடை இன்று சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது. உடுமலை நகராட்சிப்பகுதியில் பாதாள சாக்கடைத்திட்டம் செயல்படுத்தத்தொடங்கியவுடன் ஓடையில் கழிவுநீர் கலப்பது நின்று விடும். அதன் பிறகு தங்கம்மாள் ஓடை முன்பு போல் சுத்தமான நீரோடையாக மாறிவிடும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. ஆனால் பாதாள சாக்கடைத்திட்டம் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையிலும் தங்கம்மாள் ஓடையில் கழிவுநீர் தொடர்ந்து ஓடி வருகிறது.
மேலும் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகராட்சிப்பகுதியிலுள்ள பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள வயல் வெளிகளையொட்டி செல்லும் தங்கம்மாள் ஓடை பல கிராமங்களை கடந்து உப்பாறு ஓடையை அடைகிறது. பின்னர் உப்பாறு ஓடையிலுள்ள தண்ணீருடன் கலந்து உப்பாறு அணையை சென்றடைகிறது. இந்த நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சிறிது தொலைவிலுள்ள பகுதியில் தங்கம்மாள் ஓடையில் சாக்கடைக்கழிவுநீரிலிருந்து நுரை உற்பத்தியாகி பல பகுதிகளில் பறப்பதோடு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–
பெதப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய நீராதாரமாக உப்பாறு ஓடை உள்ளது. அதற்கு நீர்வரத்து தரும் ஓடையாக விளங்கிய தங்கம்மாள் ஓடை உள்ளது., அதற்கு நீர்வரத்து தரும் ஓடையாக விளங்கிய தங்கம்மாள் ஓடை தற்போது சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது. இருந்தாலும் மழைக்காலங்களில் ஓரளவு சுத்தமாகி விடுவதால் கரையோர விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் இதனால் ஓரளவு உயர்ந்து வந்தது. இந்த நிலையில் உடுமலை நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் சுத்தம் செய்யப்பட்டு ஓடையில் விடப்படும் என்ற செய்தி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
இதன் மூலம் ஆண்டு முழுவதும் ஓடையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் இடையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்று சொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு முன்பிருந்த நிலையை விட இப்போது ஓடையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. உடுமலை பெதப்பம்பட்டி ரோட்டில் செல்லவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் கழிவுநீர் ஓடையில் கலக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதிலும் தற்போது கழிவுநீரிலிருந்து நுரை உற்பத்தியாகி ரோட்டில் பறக்கிறது. இதனால் ஓடையில் ரசாயனக்கழிவுகள் எதுவும் கலக்கப்படுகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரசாயனக்கலப்பு ஏதேனும் இருக்குமானால் நிலத்தடி நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்ற கவலை விவசாயிகளிடம் எழுந்துள்ளது. எனவே தங்கம்மாள் ஓடையை அதிகாரிகள் ஆய்வு செய்து ரசாயனக்கழிவுகள் ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.