மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது உரசியதால் தகராறு: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு, 5 பேர் கைது


மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது உரசியதால் தகராறு: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு, 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2018 3:30 AM IST (Updated: 6 Jan 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் உரசியதால் ஏற்பட்ட தகராறில் டிரைவருக்கு அடி–உதை விழுந்தது. அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேச்சேரி,

தர்மபுரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் வனவாசி அருகே உள்ள சம்மட்டியூர் காட்டுவலவு பகுதியை சேர்ந்த குமார் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டியை சேர்ந்த முத்துசாமி இருந்தார்.

இந்த பஸ் மேச்சேரி அருகே உள்ள எருமப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த குணசேகரன், அரிபிரசாத், சம்பத், கணேசன், விஜய், சந்தோஷ், வினோத் ஆகிய 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் வந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள், மோட்டார் சைக்கிள் மீது பஸ்சை உரசிவிட்டு ஏன் நிற்காமல் வந்தாய்? என டிரைவர் குமாரிடம் கேட்டு தகராறு செய்தார்கள்.

உடனே அவர், பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்றார். அதற்குள் அவர்கள் அவரை கீழே இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார். மேலும் அவர்கள், பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் அவர்கள் 7 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயமடைந்த டிரைவர் குமார் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து குமார் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து எருமப்பட்டியை சேர்ந்த அரிபிரசாத் (19), சம்பத் (29), கணேசன் (47), விஜய் (22), வினோத் (21) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான குணசேகரன், சந்தோஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story