போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: கோவை மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் ஓடவில்லை


போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: கோவை மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 6 Jan 2018 4:30 AM IST (Updated: 6 Jan 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

கோவை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நேற்று காலையிலும் தொடர்ந்தது.

கோவை மாவட்டத்தில் சாய்பாபா காலனி, உக்கடம், சுங்கம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், ஓண்டிப்புதூர் உள்பட 18 அரசு பஸ் பணிமனைகள் உள்ளன. இவற்றில் சுமார் ஆயிரத்து 200 பஸ்கள் உள்ளன. இதில் டவுன்பஸ்கள் 800–ம், வெளியூர் செல்லும் பஸ்கள் 400–ம் உள்ளன. இதில் சாய்பாபா காலனியில் உள்ள தலைமையிட பணிமனையில் இருந்து 72 பஸ்கள் புறப்பட வேண்டும். ஆனால் 20 பஸ்கள் தான் நேற்று புறப்பட்டு சென்றன.

இதேபோல் மேட்டுப்பாளைத்தில் இருந்து இயக்கப்படும் 90 பஸ்களில் 3 பஸ்களும், சூலூரில் 39 பஸ்களில் 4 பஸ்களும், சுங்கத்தில் 186 பஸ்களில் 76 பஸ்களும், உப்பிலிபாளையத்தில் 55 பஸ்களில் 9 பஸ்களும், உக்கடத்தில் இருந்து இயக்கப்படும் 187 பஸ்களில் 41 பஸ்களும், வால்பாறையில் 40 பஸ்களில் 2 பஸ்களும், பொள்ளாச்சி பணிமனையில் இருந்து 124 பஸ்களுக்கு பதிலாக 19 பஸ்களும் என 18 பணிமனைகளில் இருந்து 20 சதவீத பஸ்கள் தான் புறப்பட்டு சென்றன.

மற்ற பஸ்கள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றை இயக்குவதற்கு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இல்லை. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள பஸ்களில் 20 சதவீத பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக அரசு பஸ் பணிமனைகள், அனைத்து பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோவையில் தனியார் பஸ்கள் முழு அளவில் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. பெரும்பாலான வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் மட்டும்தான் இயக்கப்படுகிறது. எனவே அந்த பகுதிகளுக்கு செல்பவர்கள் பஸ்கள் கிடைக்காததால் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனால் காந்திபுரம் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும், நிறுத்தங்களிலும் பயணிகள் பஸ் கிடைக்காமல் திண்டாடினார்கள். பஸ் கிடைக்காமல் செய்வதறியாது நின்றிருந்தவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வேறு பஸ்களில் ஏறி செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

இதற்கிடையில் கோவை சுங்கம் பஸ் பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அருணகிரி தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப். நாகராஜ், ஏ.ஐ.டி.யு.சி. அண்ணாதுரை, பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. மொத்தம் 6 ஆயிரம் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினரை வைத்து சில பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அவர்களால் முழுமையாக ஓட்ட முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவை மாவட்டத்தில் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. அவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து கோவை நகருக்கு வேலைக்காக தினமும் டவுன் பஸ்களில் ஆயிரக்கணக்கில் வருவார்கள். ஆனால் அவர்கள் கோவை வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. புறநகர் பகுதிகளில் இயக்கப்பட்ட மினி பஸ்களை கோவை நகருக்குள் எல்லா வழித்தடத்திலும் வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதனால் கோவை நகருக்குள் பல மினி பஸ்களை காண முடிந்தது.

காலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தனியார் பஸ்கள் மூலமே செல்ல முடிந்தது. மேலும் ஆட்டோ, கால் டாக்சிகளும் அதிக அளவில் இயக்கப்பட்டன. கோவையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, விழுப்புரம் போன்ற நீண்ட தூரம் இயக்கப்படும் அரசு பஸ்களை ரத்து செய்துவிட்டு அந்த பஸ்களை திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட்டன. ஆனால் அவற்றில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு தினமும் 40 தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த பஸ்கள் எதுவும் நேற்று இயக்கப்படவில்லை. ஆனால் கேரள மாநில அரசு பஸ்கள் வழக்கம் கோவை வந்து சென்றன. அவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டதால் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அரசு பஸ்கள் ஓடாததால் நேற்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்ப மாணவ– மாணவிகள் தனியார் பஸ்களை பிடித்து தான் செல்ல வேண்டி இருந்தது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ– மாணவிகள் இலவச பஸ் பாஸ் வைத்து இருந்ததால் அவர்கள் பணம் கொடுத்துதான் தனியார் பஸ்களில் செல்ல நேர்ந்தது. இதேபோல் கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் பஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளானார்கள்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். குறிப்பாக கோவையில் தங்கியிருந்து படித்து வரும் பிற மாவட்டத்தை சேர்ந்த மாணவ–மாணவிகள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

கேரளாவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரள அரசு பஸ்களும் போதிய அளவில் கோவைக்கு இயக்கப்படவில்லை. இதனால் கேரளாவை சேர்ந்தவர்களும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் கோவை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயிலில் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள், கேரளாவுக்கு இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ரெயில் பொதுப்பெட்டிகளில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டது. கைக்குழந்தைகளை வைத்து இருந்தவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். ரெயிலில் ஏறுவதற்கு பயணிகள் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை வரிசையில் நிற்க வைத்து ரெயில் ஏற வைத்தனர்.


Next Story