போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறைந்த அளவில் பஸ்கள் ஓடின
போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் நேற்று குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் ஓடின. மினி பஸ்கள் தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டன.
நாகர்கோவில்,
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சமுக தீர்வு ஏற்படாததையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி மாலையில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் 2–வது நாளாக நீடித்தது. இதனால் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.
3–வது நாளாக நேற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனாலும் நேற்று காலையில் பஸ்களை இயக்க போக்குவரத்து ஊழியர்கள் வரவில்லை.
இருப்பினும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வழக்கம்போல் அதிகாலை 2 மணி முதல் பஸ்களை இயக்க தொடங்கினர். நேற்று அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் வடசேரியில் இருந்து தூத்துக்குடிக்கும், 3.30 மணிக்கு மதுரை, பெரியகுளம் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பெருமளவு ஊழியர்கள் பணிக்கு வராததால் வந்திருந்த ஊழியர்களை கொண்டும், தற்காலிக ஊழியர்களை கொண்டும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று முன்தினம் வந்த தற்காலிக ஊழியர்களைவிட நேற்று குறைவான அளவிலேயே வந்திருந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் 814 பஸ்களில் 15 சதவீத பஸ்கள் மட்டுமே நேற்று காலையில் இருந்து மதியம் வரை இயக்கப்பட்டது.
மதியத்துக்குப்பிறகு 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நிரந்தர ஊழியர்கள் பலர் பணிக்கு திரும்பி வருவதால் 50 சதவீத அரசு பஸ்கள், அதாவது 400–க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை இயக்க முடிந்தது எனவும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேற்று பெருமளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் தேவைக்கு ஏற்ப, பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் பஸ்களை இயக்கினர். அதேநேரத்தில் சென்னை, குமுளி, மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பல பகுதிகளுக்கு பஸ்கள் கிடைக்காமல் நீண்ட நேரமாக பஸ் நிலையங்களில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலும் குடும்பத்தோடு வந்து பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
ரெயில் மூலம் நாகர்கோவில் வந்த பயணிகள் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல பஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.
பஸ்கள் ஓடாததால் நேற்று பள்ளி– கல்லூரிகளுக்கு சென்ற மாணவ– மாணவிகள் பலர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு பணிக்கு சென்றவர்களும் பஸ் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
அரசு பஸ்கள் பல பகுதிகளுக்கு இயக்கப்படாததால் மினி பஸ்கள் தொலை தூரங்களுக்கு இயக்கப்பட்டன. அதாவது நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வரையிலும் இயக்கப்பட்டன. அதேபோல் மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மினி பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அரசு பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவிலில் இருந்து வள்ளியூருக்கு ரூ.25, ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டதாகவும், அதேபோல் நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டத்துக்கு ரூ.30, ரூ.35 வரை வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் இந்த பகுதிகளில் ரோந்து வாகனத்திலும் போலீசார் ரோந்து வந்தனர்.