பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ஊர்புற நூலகர், தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்குதல். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதிய மாற்று உத்தரவை அமல்படுத்துதல். போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் கனகராஜ், பகவதியப்பபிள்ளை, லீடன்ஸ்டோன், மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர், செயலாளர் வேலவன் உள்ளிட்டோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திரளாக வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.