பட்டாசு ஆலை கதவடைப்பு போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை


பட்டாசு ஆலை கதவடைப்பு போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2018 4:15 AM IST (Updated: 7 Jan 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 12 நாளாக நடைபெற்று வரும் பட்டாசு ஆலை கதவடைப்பு போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகாசி,

திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.8½ லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் முன்னிலை வகித்தார். வங்கி தலைவர் ரமணா வரவேற்று பேசினார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ., கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், துணைபதிவாளர்கள் ராமமூர்த்தி, சரவணன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் மயில்சாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மேலாண்மை இயக்குனர் காந்திராஜூ, திருத்தங்கல் நகர அ.தி.மு.க. செயலாளர் பொன்சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பட்டாசு ஆலைகள் கடந்த 12 நாட்களாக மூடிக்கிடக்கின்றன. தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இது குறித்து நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பிரச்சினையை தீர்க்க மத்திய அரசிடம் பேச வலியுறுத்தி உள்ளேன். விரைவில் முதல்–அமைச்சரை பட்டாசு உற்பத்தியாளர்களும் சந்தித்து பேச உள்ளனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து விலக்கு அளிக்க பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். தற்போது பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்வு ஏற்பட்டு கதவடைப்பு போராட்டம் முடிவுக்கு வரும். 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை. மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story