போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலைநிறுத்தம்: நீலகிரி மாவட்டத்தில் 250 அரசு பஸ்கள் ஓடின
போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் 250 அரசு பஸ்கள் ஓடின. ஊட்டியில் இருந்து கிராமங்களுக்கு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஊட்டி,
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளதுடன், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
அதன்படி, நீலகிரி மண்டலத்தில் உள்ள 6 பணிமனைகளில் பணிபுரிந்து வரும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று பஸ்களை இயக்க மறுத்து விட்டனர். இந்த வேலைநிறுத்தம் 3–நாளாக நேற்றும் நீடித்தது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வராததால், நேற்று முன்தினத்தை விட கூடுதலாக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை வைத்து அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி–1, ஊட்டி–2 ஆகிய பணிமனைகளில் 106 பஸ்கள் இயக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 250 அரசு பஸ்கள் ஓடின. மீதம் உள்ள 95 பஸ்கள் இயக்கப்படவில்லை. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலையில் இருந்தே பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தனியார் மினி பஸ்களும் வழக்கம்போல் ஓடின. இருந்தபோதிலும், ஒரு சில கிராமங்களுக்கு பஸ்கள் செல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஜீப்களில் செல்லும் பொதுமக்கள் மெயின் ரோட்டிலேயே இறக்கி விடப்பட்டனர். அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே தங்களது ஊர்களுக்கு சென்றனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பணப்பலன்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பேனர் போக்குவரத்து கழகம் சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால், ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் பயணிகள் வெகுநேரம் காத்திருந்தனர். ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் பஸ்கள் ஓடாததால் அந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு வந்த ஜீப்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது உடைமைகளுடன் பஸ்களை தேடி அலைந்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பணிமனை முன்பு மற்றும் பஸ் நிலைய வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஊட்டியில் இருந்து கோவைக்கு தனியார் பஸ் ஒன்றும் இயக்கப்பட்டது. ஆனால், அதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். ஊட்டியில் இருந்து மைசூரு, பெங்களூரு செல்லும் 5 பஸ்கள் ஓடவில்லை. அதனை தொடர்ந்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, அனுபவம் வாய்ந்த டிரைவர் மூலம் பெங்களூருவுக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது.
கூடலூர் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தின் கீழ் 44 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் நேற்றும் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கூடலூரில் இருந்து ஊட்டி, பந்தலூர், கன்னியாகுமரி, ளெசன்னை ஆகிய இடங்களுக்கு தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டது.
இதேபோல் கூடலூர்– ஊட்டிக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயணிகள் எண்ணிக்கையும் பஸ்களில் அதிகமாக காணப்பட்டது. முன்னதாக அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டனர். இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 25 பஸ்கள் இயக்கப்படுவதால் நகர பகுதியில் மக்கள் நடமாட்டம் கடந்த நாட்களை விட கூடுதலாக இருந்தது.
ஆனால் திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூர் பஸ் நிலையம் மற்றும் பணிமனை உள்ளே மீதமுள்ள பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், அங்குள்ள அறிவிப்பு பலகையில் வேலைநிறுத்தம் தொடரும் என்று எழுதப்பட்டு உள்ளது. அதில் வேலைநிறுத்தம் தொழிலாளர் உரிமை. இதற்கு அரசோ அல்லது நீதிமன்றமோ தடை விதிக்க முடியாது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் மிரட்டல் நியாயமற்றது. அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. இருக்கும் வேலைக்கு நியாயமான ஊதியம் கோருகிறோம். வேறு வேலைக்கு செல்லுமாறு உயர்நீதிமன்றம் கூறுவது கண்டனத்திற்கு உரியதாகும். கோரிக்கைகள் நிறைவேற வேலைநிறுத்தம் செய்வோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.