போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலைநிறுத்தம்: நெல்லை– தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை


போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலைநிறுத்தம்: நெல்லை– தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 7 Jan 2018 3:00 AM IST (Updated: 7 Jan 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை– தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. கிராமப்புற பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

நெல்லை,

நெல்லை– தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. கிராமப்புற பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

வேலைநிறுத்தம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த 4–ந் தேதி நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அன்று இரவு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்தில் உள்ள ஊழியர்களும் கடந்த 4–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் 11 பணிமனைகளில் உள்ள 654 பஸ்களில் 328 பஸ்கள் மட்டுமே இயங்கின. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 88 பஸ்களில் 40 பஸ்கள் மட்டுமே ஓடின. பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பணிமனையில் உள்ள 68 பஸ்களில் 28 பஸ்களும், தாமிரபரணி பணிமனையில் உள்ள 52 பஸ்களில் 25 பஸ்களும், வண்ணார்பேட்டை பை–பாஸ் பணிமனையில் 72 பஸ்களில், 35 பஸ்களும், வள்ளியூர் பணிமனையில் 40 பஸ்களில் 15 பஸ்களும், திசையன்விளை பணிமனையில் உள்ள 32 பஸ்களில் 17 பஸ்களும் இயக்கப்பட்டன.

கிராம மக்கள் அவதி

சங்கரன்கோவில் பணிமனையில் உள்ள 64 பஸ்களில் 17 பஸ்களும், தென்காசி பணிமனையில் உள்ள 69 பஸ்களில் 30 பஸ்களும், செங்கோட்டை பணிமனையில் 38 பஸ்களில், 13 பஸ்களும் இயக்கப்பட்டன. மதியம் 12 மணிக்கு பிறகு தனியார் பஸ்களில் பணியாற்றிய டிரைவர்கள், கண்டக்டர்களை வைத்து இயக்கப்படாத பஸ்கள் இயக்கப்பட்டன. புதியதாக நியமிக்கப்பட்ட கண்டக்டர்களுக்கு டிக்கெட் விலை தெரியவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

நெல்லைக்கு வெளியூர்களில் இருந்து இயக்கப்படுகின்ற தனியார் மினிபஸ்கள், ஆட்டோக்கள், வேன்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டன. பஸ்கள் சரிவர ஓடாததையொட்டி நெல்லைக்கு செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து வந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததை கண்டித்து, பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் பயணிகள் பஸ்சை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பஸ் டெப்போக்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையான பஸ்கள் இயங்கவில்லை. காலை முதல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் அவதிப்பட்டனர் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3–வது நாளாக தொடர்ந்தது.

நேற்று மதியம் 12 மணி அளவில் தூத்துக்குடி நகர பஸ் டெப்போவில் உள்ள 62 பஸ்களில் 15 பஸ்களும், புறநகர் டெப்போவில் உள்ள 52 பஸ்களில் 22 பஸ்களும், திருச்செந்தூரில் 55 பஸ்களில் 23 பஸ்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 34 பஸ்களில் 12 பஸ்களும், கோவில்பட்டியில் 69 பஸ்களில் 22 பஸ்களும், விளாத்திகுளத்தில் 38 பஸ்களில் 13 பஸ்களும், சாத்தான்குளத்தில் 6 பஸ்களில் 5 பஸ்களும் என ஆக மொத்தம் 316 பஸ்களில் 112 பஸ்கள் இயங்கின. இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 70 பஸ்களில் 27 பஸ்கள் இயக்கப்பட்டன. போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பெரும்பாலான அரசு பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டன. மேலும் தனியார் வசம் உள்ள பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. இருந்த போது கிராமப்புறங்களில் ஒருசில இடங்களை தவிர மற்ற இடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்படையவில்லை.

கோவில்பட்டி– விளாத்திகுளம்

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 68 பஸ்களில் 34 பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்ற பஸ்களை அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக டிரைவர்கள் இயக்கினர். கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்கினர். தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 55 பஸ்களில் 30 பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 55 பஸ்களில் 34 பஸ்கள் இயக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 34 பஸ்களில் 24 பஸ்கள் இயக்கப்பட்டன. சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 6 பஸ்களும் இயக்கப்பட்டன.

பயணிகளுக்கு சிரமம் இல்லாத வகையில், அனைத்து வழித்தடங்களிலும் அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கினர்.


Next Story