போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம்


போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:45 AM IST (Updated: 7 Jan 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஈரோடு,

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி இரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கும்வரை போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்று தொ.மு.ச. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி 3–வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றதால் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. போராட்டத்தில் கலந்துகொள்ளாத தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே பணியில் ஈடுபட்டனர். அதிலும், நேற்று முன்தினம் வேலை செய்தவர்கள் நேற்று ஓய்வு எடுத்துக்கொண்டனர்.

எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் சீருடை அணியாமல் பணியில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் சீருடை இல்லாத மாற்று உடையை அணிந்துகொண்டு வேலை செய்தனர்.

ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், சத்தியமங்கலம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் இல்லாமல் குறைவான பஸ்களே சென்று வந்தன. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் பயணிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கரூர் வரை சென்று, அங்கிருந்து வேறு பஸ் மாறி சென்றனர்.

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் 80 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை. நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அத்தியாவசிய வேலைக்காக மட்டுமே வெளியூர் சென்றனர். இதன்காரணமாக ஈரோடு பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகையா கூறும்போது, ‘‘ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் அமர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களை ஓட்டும் டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கி வருகிறார்கள். இதனால் பயணிகளும் பஸ்களில் ஏறுவதற்கு அச்சப்படுகிறார்கள். மேலும், பொதுமக்களே எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். எங்களது கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்’’, என்றார்.

கொடுமுடி பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கரூருக்கு மிகக்குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 40 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. மற்ற 37 பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. நம்பியூர் பணிமனையில் இருந்து 31 அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

ஈரோட்டில் இருந்து மேட்டூர் வழியாக அம்மாபேட்டை வந்த பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்தது. மிக குறைவான பயணிகளே இருந்தார்கள். இதேபோல் தாளவாடியில் 10 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்சிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து கோவை, ஈரோட்டுக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.


Next Story