மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் கிராமம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை கடைக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், இங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மதுஅருந்தவருபவர்கள் போதை தலைக்கேறியதும் பெண்களை கேலி செய்வார்கள். இதனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று, நாங்கள் ஏற்கனவே தெரிவித்து வந்தோம். இருப்பினும் கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்றனர்.
பின்னர் போலீசார் கூறுகையில், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து, மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போலீசாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.