போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கம்


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:45 AM IST (Updated: 7 Jan 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3–வது நாளாக நீடித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை அதிகாரிகள் இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

விழுப்புரம்,

13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே முடித்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் கடந்த 4–ந் தேதி மாலையில் இருந்து வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இவர்களின் போராட்டம் நேற்றும் 3–வது நாளாக நீடித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக நேற்று முன்தினம் 90 சதவீத பஸ்கள் ஓடாததால் அனைத்து தரப்பு மக்களும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு, தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு எச்சரிக்கையும் விடுத்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை நேற்று 3–வது நாளாக தொடர்ந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர தொ.மு.ச. உள்ளிட்ட மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் பணிக்கு செல்லாமல் நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழகமும் வெளியில் இருந்து டிரைவர்கள், கண்டக்டர்களை தற்காலிகமாக பயன்படுத்த முடிவு செய்து சுற்றறிக்கை வெளியிட்டது. அதோடு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று அதிகாலை முதலே விழுப்புரம் போக்குவரத்துக்கழக 1,2,3–வது பணிமனைகள், கள்ளக்குறிச்சி 1, 2–வது பணிமனைகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய 11 பணிமனைகளிலும் வெளியில் இருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் பலர் வந்தனர்.

இவர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் பஸ் இயக்குதலில் அவர்களின் அனுபவம் குறித்து அந்தந்த பணிமனையை சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்து அவர்களை தற்காலிக டிரைவர்களாகவும், கண்டக்டர்களாகவும் பயன்படுத்தி அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று காலை முதல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் வழக்கம்போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி– கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஓரளவு சிரமமின்றி சென்றனர். காலை 10 மணி வரை மாவட்டம் முழுவதும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் மேலும் பஸ்களை கூடுதலாக இயக்க மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழகமும் நடவடிக்கை எடுத்தது.

அதன் அடிப்படையில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை உடனுக்குடன் பயன்படுத்தி அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக காலை 11 மணிக்கு மேல் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின. ஒவ்வொரு பஸ்சும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

அரசு பஸ்கள் பெருமளவில் ஓடத்தொடங்கிய போதிலும் போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் எதிரொலியினால் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. வழக்கமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு 5 நிமிடத்திற்கு ஒருமுறை அரசு பஸ்கள் இயக்கப்படும். அந்த பஸ் நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

ஆனால் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டபோதிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் பஸ் நிலையத்தின் பெரும்பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது.

மேலும் கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்டதைப்போல் நேற்றும் தனியார் பஸ்கள், மாவட்டம் முழுவதும் அதிகளவில் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஓரளவு சிரமமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வந்தனர்.

தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 11 போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் வெளியில் இருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் என 250–க்கும் மேற்பட்டோரை வரவழைத்து அவர்களை தற்காலிகமாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாலை 6 மணி வரை 660 அரசு பஸ்கள் ஓட வேண்டிய நிலையில் 589 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் 87.24 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன என்றார்.


Next Story