பாவூர்சத்திரம்– மேட்டூர் இடையே ஆளில்லா ரெயில்வே கேட்டில் நிரந்தர பணியாளர் நியமிக்க வேண்டும்
மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம், வசந்தி முருகேசன் எம்.பி. கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
தென்காசி,
மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம், வசந்தி முருகேசன் எம்.பி. கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
தென்காசி– நெல்லை ரெயில் பாதையில் பாவூர்சத்திரம்– மேட்டூர் இடையே ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில் பாதையின் இருபுறமும் உள்ள அரியப்பபுரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், நாட்டார்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் குறிப்பாக விவசாயிகள் இந்த ஆளில்லா ரெயில்வே கேட் வழியை பயன்படுத்தி செல்கிறார்கள். இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் விவசாய வேளாண் பொருட்களை கொண்டு செல்லவும், வேலைக்கு சென்று வாழ்வாதாரம் தேடி பயணிக்கவும் இந்த வழியாகவே செல்ல வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு பதிலாக ரெயில் பாதைக்கு கீழோ அல்லது மேலோ பாலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவு சரியானது என்றாலும் இப்பகுதியை பொறுத்தவரை சரியாக இருக்காது.
இப்பகுதி பள்ளமாக இருப்பதால் தண்ணீர் அடிக்கடி தேங்கி இருக்கும். எனவே, இங்கு பாலம் அமைப்பது பயன் தராது. தற்போது இங்கு ஒப்பந்த பணியாளர் ஒருவர் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டுள்ளார். எனவே இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இங்கு நிரந்தர பணியாளர்களை நியமித்து நிரந்தர பணியாளர் உள்ள ரெயில்வே கேட்டாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.