கடலூர் மாவட்டத்தில் 3–வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


கடலூர் மாவட்டத்தில் 3–வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:45 AM IST (Updated: 7 Jan 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்தம் செய்தனர்.

கடலூர்,

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த 4–ந்தேதி நடந்தது. இது தோல்வியில் முடிவடைந்ததால் கடந்த 4–ந்தேதி மாலை முதல் மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 3–வது நாளாக நடந்தது. இதனால் நேற்று 3–வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. எனினும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருப்பதால் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இதனால் அரசு பஸ்களை இயக்க தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் 110 தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் பஸ்களை இயக்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டது. அதேப்போல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஆளுங்கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தைச்சேர்ந்த தொழிலாளர்களைக்கொண்டும் பஸ்களை இயக்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 11 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் 574 பஸ்கள் உள்ளன. அவற்றில் 229 பஸ்கள் ஓடுகின்றன. 55 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு வந்து உள்ளனர் என்றார்.

இது பற்றி தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேலிடம் கேட்ட போது, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தவறான தகவலை சொல்கிறார்கள். மாவட்டம் முழுவதும் 100–க்கும் குறைவான பஸ்களே ஓடுகிறது என்றார்.

இவ்வாறு அரசு தரப்பும், தொழிற்சங்க தரப்பினரும் கூறும் தகவல்களில் முரண்பாடு காணப்படுகிறது. ஆனால் கள நிலவரத்தை பார்க்கையில் அரசு பஸ்களை சாலைகளில் காண முடியாத நிலைமையே உள்ளது. இது தொழிற்சங்கத்தரப்பினரின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது. எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள்.

அரசு பஸ்கள் ஓடாததால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரத்தில் பஸ்நிலையங்கள் கூட்டமின்றி காணப்படுகிறது.

கடலூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கூட்டமின்றி காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் வந்து செல்வதை காண முடிந்தது. ஆனால் சில அரசு பஸ்கள் மட்டும் காட்சிப்பொருள் போல நின்று கொண்டிருந்தன. அந்த பஸ்களில் கடலூர் என்ற பெயர் பலகை மட்டுமே இருந்தது, ஒரு சில பஸ்களில் ஊர்பெயர் பலகையே இல்லை.

இது பற்றி தொழிற்சங்கத்தினரிடம் கேட்ட போது, பணிமனையில் இருந்து ஒருசில பஸ்களை ஓட்டிச் சென்று பஸ் நிலையத்தில் நிறுத்துகிறார்கள். பிறகு மீண்டும் அந்த பஸ்களை பணிமனைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள், இதனால் பஸ்நிலையத்தில் எப்போதும் பஸ்கள் நிற்பது போன்ற மாயத்தோற்றம் தெரியும். அதிகாரிகளின் ஏற்பாட்டில் இது நடக்கிறது என்று கூறினார்கள்.


Next Story