கடலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் முழக்க போராட்டம்
கடலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்முழக்க போராட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உச்சவரம்பின்றி ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமார், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் தமிழ்செல்வி சிறப்புரையாற்றினார்.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜனார்த்தனன், ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், அம்பேத்கர், ஆசைதம்பி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.