3–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்: தற்காலிக டிரைவர்கள் மூலமாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன


3–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்: தற்காலிக டிரைவர்கள் மூலமாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 7 Jan 2018 4:00 AM IST (Updated: 7 Jan 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்ததால் திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் பெரும்பாலும் ஓடவில்லை. மாநகரில் தற்காலிக டிரைவர்கள் மூலமாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக கூறி கடந்த 4–ந் தேதி இரவு முதல் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த 4–ந் தேதி இரவு முதல் அரசு பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரில் 2 பணிமனைகளும், பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை ஆகியவற்றில் தலா ஒரு பணிமனையும் என 6 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 3–வது நாளாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். டிரைவர், கண்டக்டர் இல்லாததால் அரசு பஸ்களை முழுமையாக இயக்க முடியவில்லை. அரசு பஸ்கள் பணிமனை வளாகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.

அரசு பஸ்களை இயக்குவதற்கு தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் அந்தந்த கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று நேற்று முன்தினம் அறிவிப்புசெய்தனர். அதன்படி நேற்று திருப்பூரில் 150–க்கும் மேற்பட்ட தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் அரசு பணிமனை கிளைக்கு சென்றனர். கனரக ஓட்டுனர் உரிமம் பெற்ற டிரைவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. பெரும்பாலும் தனியார் பள்ளி பஸ் டிரைவர்கள் வந்திருந்தனர். இதுதவிர திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களையும் பணியில் சேர்க்கப்பட்டனர்.

இதன்காரணமாக நேற்று திருப்பூரில் உள்ள 2 பணிமனைகளில் இருந்து டவுன் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டன. 70 சதவீத பஸ்கள் பணிமனைகளில் இருந்து வெளியே சென்றன. திருப்பூர் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் டவுன் பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டன. இதன்காரணமாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று பயணிகளின் வருகைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டது. அதுபோல் தனியார் பஸ்களும், மினிபஸ்களும் வழக்கத்தை விட அதிகமாக இயக்கப்பட்டன.

ஆனால் திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக திருப்பூர் புதிய பஸ் நிலையம் நேற்று பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, நாகர்கோவில் போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் இயக்கம் முற்றிலும் முடங்கியது. குறைந்த அளவில் தான் தனியார் பஸ்கள் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. இதனால் வெளிமாவட்ட மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கிடைத்த பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏறி சென்றதை காண முடிந்தது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் வழக்கம் போல் வெளியூர் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை 3–வது நாளாக தொடர்ந்ததால் வெளிமாவட்ட பயணிகள், தொலைதூர பயணிகள் ரெயிலில் பயணம் செய்தனர். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமைதோறும் சம்பளம் வழங்கப்படும். நேற்று சனிக்கிழமை என்ற போதிலும் பக்கத்து மாவட்ட தொழிலாளர்கள் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படாததால் சொந்த ஊர் செல்லும் திட்டத்தை கைவிட்டனர். இதுபோல் பொதுமக்களும் வெளியூர் செல்வதை தவிர்த்து விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில், வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும் நடவடிக்கையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார், திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். எத்தனை அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது?. தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் மூலமாக பஸ்கள் இயக்கப்படும் விவரம் உள்ளிட்டவை குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் காங்கேயம் ரோட்டில் உள்ள 2 பணிமனைகளுக்கும் சென்று சப்–கலெக்டர் ஆய்வு செய்தார். 2 பணிமனைகளில் இருந்து 60 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பஸ்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு சப்–கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திருப்பூர் தெற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உடன் இருந்தார்.

திருப்பூரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக கோர்ட்டு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தாமாகவே முன்வந்து தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் அரசு பணிமனைக்கு சென்று பஸ்களை ஓட்டி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அரசு பஸ்கள் ஓடாததால் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த கவுசல்யா என்பவர் கூறும்போது, திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் பஸ் மூலமாக திருப்பூர் வந்து செல்கிறேன். அரசு பஸ்கள் சரிவர ஓடாததால் தனியார் பஸ்களில் திருப்பூர் வந்து செல்கிறேன். காலை, மாலை நேரங்களில் பஸ்கள் தாமதமாக வருகிறது. கிடைக்கும் பஸ்களில் கூட்ட நெரிசலில் ஏறி பயணிக்க வேண்டியுள்ளது. வடுகபாளையத்தில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்களில் ரூ.7 பயண கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் கடந்த 2 நாட்களாக தனியார் பஸ்களில் ரூ.15 பயண கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார்.

மங்கலத்தை சேர்ந்த சித்ரா என்பவர் கூறும்போது, திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் இருந்து குறைந்த அளவில் தான் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் வேலைக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் சில பயணிகள் கூறும்போது, பொள்ளாச்சி, சேலம், கரூர், ஈரோடு மார்க்கமாக இயக்கும் தனியார் பஸ்களில், இடையில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள். கட்டணமும் அதிகமாக வசூலிக்கிறார்கள். கட்டணம் அதிகம் கொடுத்து சென்றாலும் கூட, வழியில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள் என்றனர்.


Next Story