கோவில் சிலைகள் உடைப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கோவில் சிலைகள் உடைப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jan 2018 4:15 AM IST (Updated: 7 Jan 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே கோவில் சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதையறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்,

அரியலூர் அருகேமணக்குடி கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் உள்ளது செங்கமுத்தையா வகையறா கோவில். இங்கு அய்யனார், அம்மன் உள்ளிட்டவை காவல் தெய்வமாக வைக்கப்பட்டு சின்னமணக்குடி, பெரியமணக்குடி கிராம மக்கள், பொய்யூர், கல்லங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தி பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். பல குடும்பங்களுக்கு இது குலதெய்வ கோவிலாகவும் இருக்கிறது. ஊரில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஒதுக்குப்புறமாக இந்த கோவில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் இங்கு அதிகம் இருப்பதில்லை. எனினும் வயல்வெளியில் வேலை பார்ப்பவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் இங்கு வந்து கோவிலில் அமர்ந்து செல்வது உண்டு.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியஏரிக்கரை வழியாக ஆடு, மாடுகளை சிலர் மேய்த்தபடி வந்து கொண்டிருந்தனர். ஏரியின் மதகு பகுதியில் ஏராளமான மதுபாட்டில்களும், உணவு பொட்டலங்கள் சிதறியபடி கிடந்தது. இதைகண்டதும் சந்தேகமடைந்து அப்பகுதியை சுற்றி பார்த்த போது மதகின் கீழே ஏரியில் 2 அடி உயரம் உள்ள சாமி சிலை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். செங்கமுத்தையா கோவில் சிலை போல் உள்ளதை அறிந்ததும் கோவிலுக்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், சிமெண்டு கலவையால் செய்யப்பட்ட பெரிய அய்யனார் சிலை மற்றும் காவல் தெய்வ சிலைகள், சூலாயுதம், ஓடுகளால் வேயப்பட்டிருந்த கோவிலின் மேற்கூரை ஆகியவை உடைக்கப்பட்டு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட் டிருந்தது தெரிய வந்தது. கற்சிலையை வைத்து அய்யனார் சிலையின் முகம் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஊருக்குள் ஓடி மக்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மணக்குடி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கமுத்தையா கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் சிலர் அருள்வந்து சாமி ஆடி சிலையை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் கயர்லாபாத் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து வந்து சிலைகள் உடைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விஷமிகள் சிலர் மது அருந்திவிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் சிலைகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story