விபத்தை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?


விபத்தை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?
x
தினத்தந்தி 7 Jan 2018 11:00 AM IST (Updated: 7 Jan 2018 10:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் போக்குவரத்து வார விழா ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டாலும், விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.

ஒவ்வொரு ஆண்டும் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் தான் அதிக உயிர் பலி ஏற்படுகிறது. இதை தடுக்க, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை வரையறுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்கான ஆய்வும் தற்போது நடந்து வருகிறது.

இவை ஒருபுறம் இருக்க, விபத்துகள் விளைவதற்கு முதன்மையான காரணமாக திகழ்வது, போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்க விடுவதுதான். வாகன ஓட்டிகளில் கணிசமானோர் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை. அதில் இன்னும் பலர் வாகன ஓட்டுனர் பயிற்சியை முறையாக பெறாமல் புதிய வாகனங்களை வாங்கி அதிக வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில் பெரும்பாலானவர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள். உதாரணமாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. செல்போன் பேசிக்கொண்டும் வாகனத்தை ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் யார் கடைபிடிக்கிறார்கள்? பெரும்பாலானவர்கள் செல்போனை காதோரம் வைத்தபடியே இருசக்கர வாகனத்தை ஓட்டுவது திரும்பிய திசையெங்கும் காண நேரிடுகிறது. மேலும் இரவு நேரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டுகிறார்கள். இவர்கள் தங்களை பற்றியும், பிறரை பற்றியும் கவலைப்படுவதில்லை. விளைவு, தன்னால் ஏற்படும் விபத்தில் தானும் உயிரை நீத்து, பிறரையும் உடன் அழைத்து செல்கிறார்கள்.

கார், வேன் ஓட்டுவோர் சீட் பெல்ட் அவசியம் அணியவேண்டும் என்பது போக்குவரத்து விதிமுறையாக உள்ளது. இதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்? இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் அத்தனையும் வேதனை தருவதாகத்தான் இருக்கின்றன. ஏனென்றால், சீட் பெல்ட் அணிவோரின் எண்ணிக்கை மிக சொற்ப அளவில் இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, சீட் பெல்ட் அணியாததால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் உயிரை இழக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் சாகசம் என்ற பெயரில், இளைஞர்கள் பலரும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் சாலையில் அணிவகுப்பதை பார்க்க முடியும். நடுரோட்டில் கால் ஊன்றி மோட்டார் சைக்கிளில் வட்டமடிப்பதையும் காண முடியும். இன்னும் பல சாகசங்களையும் செய்கிறார்கள். இந்த சாகச மோகம் சுருட்டி செல்லும் உயிர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் ஏராளமானோர் காயமடைகிறார்கள். போற்றுதலுக்குரிய உயிரை விபத்தில் இழக்கிறார்கள். இதற்கெல்லாம் அணை போட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஒரு குடும்ப தலைவன் இழப்பினால் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இதை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதே போல ஒரு குடும்பத்தில் யாராவது விபத்தில் பலியானால் அவர்களின் குடும்பம் எத்தகைய துயர கடலில் தத்தளிக்கும் என்பதை யோசித்து வாகனங்களை சாலையில் செலுத்த வேண்டும். கார், லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுனர்கள் அனைவரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தங்கள் இருக்கையின் முன்பு வைத்து கொள்ளவேண்டும். அதனை பார்க்கும் போதெல்லாம் வாகனம் ஓட்டி செல்கையில் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனை உதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. விபத்துகள் குறைவதற்கு இது ஒரு வகை வழியாகும். வாகன விபத்துகளில் உயிரிழப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பலர் கை, கால் உறுப்புகளை இழந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இளம் வயதில் கனரக ஓட்டுனர் உரிமம் பெறுபவர்கள் தங்கள் எண்ணம் போல் விதிமுறைகளை மதிக்காமல், சற்றும் யோசிக்காமல் அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதால் பல உயிர்கள் பலியாகி வருகின்றன. வாகன விபத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர், உறுப்புகளை இழந்தவர்கள் படும் கஷ்டங்களை விளக்கி கூறும் வகையில், குறும்படங்களை தயாரித்து முகநூல், டி.வி. சேனல்களில் வெளியிட்டு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

மத்திய அரசு சாலைகளின் தரத்தை ஒருபுறம் மேம்படுத்தினாலும், விதிமுறைகளை பின்பற்றாவிடில் சிறை தண்டனையும், அதிக அபராதத்தையும் வசூலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும். இலகுரக, கனரக ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதில் வாகனம் ஓட்டுவதில் முழுமையான பயிற்சியும், போக்குவரத்து விதிமுறைகளையும் தெரிந்தவரா? என்பதையும் ஆராய வேண்டும்.

இதற்கு கால அவகாசம் அதிகமானால், புதிய துறையை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் உரிமம் வழங்குவதற்கு முதற்கட்ட சோதனைக்கென அதிகாரிகள் குழுவை நியமிக்கவேண்டும். இந்த அதிகாரிகள் குழுவினர் அறிக்கையின் பேரில் ஓட்டுனர் உரிமம் வழங்கவேண்டும். இதில் ஏதும் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று அறிவிக்கவேண்டும். இதுவே வாகன விபத்துகளை குறைப்பதற்கு தீர்வாக இருக்கும்.

-இளவளவன்


Next Story