அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு: 4–வது நாளாக பொதுமக்கள் கடும் அவதி


அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு: 4–வது நாளாக பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 8 Jan 2018 3:00 AM IST (Updated: 8 Jan 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் ஊழியர்கள் நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருவதால், நேற்று 4–வது நாளாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி,

அரசு பஸ் ஊழியர்கள் நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருவதால், நேற்று 4–வது நாளாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்காலிய ஓட்டுனர்கள் மூலம் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

வேலைநிறுத்தம்

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4–வது நாளாக போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மாற்று டிரைவர்கள், நடத்துநர்கள் மூலம் பஸ்சை இயக்க அரசு முடிவு செய்தது.

190 பேர் தேர்வு

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பஸ், லாரி ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி வாகனம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அரசு பஸ்சை இயக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, மாவட்டத்தில் 102 ஓட்டுநர்கள், 89 நடத்துநர்கள் ஆக மொத்தம் 190 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலையில் அதிக அளவில் ஓட்டுநர்கள் இருந்தும், போதுமான நடத்துநர்கள் இல்லாததால் பல பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நேற்று காலையில் மாவட்டத்தில் 7 டெப்போக்களில் உள்ள 384 பஸ்களில் 178 பஸ்கள் இயக்கப்பட்டன. அதேசமயம், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களில் நீண்ட நேரம் மக்கள் காத்திருந்து பஸ்களில் ஏறிச் சென்றனர். தனியார் பஸ்களும், ஆம்னி பஸ்களும், மினி பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் தூத்துக்குடி பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story