விழுப்புரம் மாவட்டத்தில் 4–வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை பொதுமக்கள் பாதிப்பு
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 4–வது நாளாக அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம்,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்பட 14 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. மேலும் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இருப்பினும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று 4–வது நாளாக போராட்டம் நீடித்தது.
விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒரு சில பணிமனைகளில் தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்கள் வழக்கம்போல இயங்கி வருகின்றன.
மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து சென்றன. அரசு பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு அதிகளவில் இயக்கப்பட்டதை பார்க்க முடிந்தது.
நேற்றைய நிலவரப்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, செஞ்சி உள்பட மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்து 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று விடுமுறை நாள் என்பதாலும், தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பஸ்களில் குறைந்த அளவிலான பயணிகள் சென்று வந்ததை காண முடிந்தது.
இது குறித்து பஸ் பயணி ஒருவர் கூறியதாவது:–
அரசு பஸ்கள் ஓடாததால் வெளியூர் சென்று வர முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்படும் அரசு பஸ்களிலும் பயணம் செய்ய அச்சமாக இருக்கிறது. இதனால் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்டு, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.