திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 4–வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்


திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 4–வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2018 3:45 AM IST (Updated: 8 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 4–வது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து கழக ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்பும்படி கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களிலும் 4–வது நாளாக நேற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஏராளமான பஸ்கள் கடந்த 4 நாட்களாகவே மாவட்டத்திற்குட்பட்ட பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பல பஸ்கள் பஸ் நிலையங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு பிரதான கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஈடுபட்டு வருவதால் 80 சதவீதம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான தற்காலிக பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பஸ்கள் மாவட்டம் முழுவதும் ஓடாததால் நெரிசல் மிகுந்த ரோடுகள் வாகன நெரிசல் இன்றி காணப்பட்டது. அதே சமயம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மினி பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பஸ்களை இயக்கி வருகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவசரகதியில் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். நீண்ட நேரம் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனால் திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் பஸ்களும், தற்காலிக பணியாளர்களை வைத்து அரசு பஸ்களும் இயக்கப்பட்டாலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படவில்லை. தற்காலிக பணியாளர்களை வைத்து பஸ்களை இயக்குவதால் பயணிகள் கடும் அச்சத்தையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தற்காலிக பணியாளர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஓட்டுனர்கள் போதிய பயிற்சி இல்லாததால் தட்டு தடுமாறியே பஸ்களை ஓட்டிச்செல்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து பஸ்சில் ஏறும் பயணி, இறங்கும் வரை அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் கிராமபுறங்களுக்கு செல்லும் பஸ்களை ஓட்டும் தற்காலிக ஓட்டுனர்கள் பஸ்சில் உள்ள பயணிகளிடம் பாதை கேட்ட படியே பஸ்சை ஓட்டிச்செல்கின்றனர்.

சில நேரங்களில் மாற்றுப்பாதையில் சென்று விட்டு பயணிகளின் அறிவுறுத்தலால் மீண்டும் சரியான பாதையில் பஸ்சை ஓட்டிச்செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேவையான பஸ்கள் இல்லாதது, பயிற்சி இல்லாத தற்காலிக ஓட்டுனர்களை நியமித்திருப்பது என்ற காரணங்களால் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், போக்குவரத்து துறையும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.

கடந்த 4 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை நியமித்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இனிப்பு மற்றும் உப்பை கொடுத்தனர். இந்த நிலையில் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை பாராட்டும் விதமாக பா.ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நேற்று காலை திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமையில் ஏராளமான பா.ஜனதா கட்சியினர் கூடினார்கள். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த தற்காலிக ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கி, கை குலுக்கி பாராட்டு தெரிவித்தனர். போக்குவரத்து கழக ஊழியர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பா.ஜனதாவினர் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு இனிப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்து துறையில் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு போதிய பயிற்சி மற்றும் முன் அனுபவம் இல்லாத காரணத்தால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பஸ்களை இயக்கி வருகின்றனர். நடத்துனர்களுக்கு தேவையான உபகரணங்களோ அல்லது தேவையான எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக பயணிகளிடம் இருந்து பெறும் பயண சீட்டுக்கான கட்டணத்தை வாங்கி வைப்பதற்காக பை கொடுக்கப்படவில்லை.

இதனால் பல நடத்துனர்கள் மஞ்சைப்பை, பள்ளிக்கு கொண்டு செல்லு பை உள்ளிட்டவற்றில் பயண சீட்டுக்கான பணத்தை சேகரித்து வைத்துக்கொள்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான பைகளில் காசு சேகரிக்கப்படுவதை பார்க்கும் பயணிகள் அவர்களை ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்.

போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்களை வைத்து நிலைமையை சமாளித்து வருகின்றனர். ஆனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட அதிக தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு முற்றிலும் பஸ்கள் இயக்கப்படாததால் திருப்பூர் புதிய பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒருசில தனியார் பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்காக தயாராக இருந்தவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பல பயணிகள் ரெயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தற்காலிக தினக்கூலி பணியாளர்கள் அரசு பஸ்சை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஆதீஸ்குமார்(வயது 30) என்ற தற்காலிக ஓட்டுனர் பஸ்சை ஓட்டி சென்றார். திருப்பூர் பழைய பஸ்நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளார். பஸ் ஷெரீப் காலனி வழியாக செல்லும் போது ரோட்டோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இறங்கியுள்ளது.

இதனால் அருகில் இருந்த வீட்டின் சுவற்றில் பஸ் உரசி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. பெருமளவு பயணிகள் பஸ்சில் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் உதவியால் போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்சை அங்கிருந்து மீட்டு கொண்டு சென்றனர். இவ்வாறான சம்பவங்களால் தற்காலிக டிரைவர்களை நியமிப்பதில் போக்குவரத்து கழக அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story