விருத்தாசலத்தில் தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
விருத்தாசலத்தில் தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து கழக அதிகாரிகள் தற்காலிக டிரைவர்களை பயன்படுத்தி குறைந்த அளவிலான பஸ்களை இயக்கி வருகின்றனர்.
இருப்பினும் உரிய பயிற்சி இல்லாத காரணத்தால் தற்காலிக டிரைவர்கள் இயக்கி வரும் பஸ்கள் ஆங்காங்கே விபத்தில் சிக்கி வருகின்றன. இதன் காரணமாக பொது மக்கள் அரசு பஸ்சில் ஏறவே பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை 2–ல் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவரான ஜோதி என்பவர் ஓட்டினார்.
பஸ் நிலையம் அருகே சென்றபோது, அந்த பஸ் முன்னாள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல், அவரது மகள் சாரன்சுவிட்டி மற்றும் டேவிட்ஜியோன் குமார் ஆகியோர் மீது மோதியது. மேலும் அந்த பஸ் அதற்கு முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சாமுவேல் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவர்கள் தற்காலிக பஸ் டிரைவரை பிடித்து தாக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் போலீசார் அங்கு வந்து தற்காலிக பஸ் டிரைவர் மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் பொது மக்களுடன் சேர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உரிய பயிற்சி பெறாத தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ் இயக்குவதால்தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே இதை தடுக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று விருத்தாசலம் பஸ் நிலையத்து வந்தது. இதைபார்த்த பொது மக்கள், போக்குவரத்து தொழிலாளகளும், அந்த பஸ்சை வழிமறித்ததோடு, பஸ்சை ஓட்டி வந்த தற்காலிக டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேவிட்சியோசன் குமார் பலனின்றி இறந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடதக்கதாகும்.
இதை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள், விருத்தாசலம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பயிற்சி பெறாத தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அக்கட்சியினர் விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.