அம்மாபேட்டையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு, டிரைவர் படுகாயம்
அம்மாபேட்டையில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக தொழிற்சங்கத்தை சேர்ந்த கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
அம்மாபேட்டை,
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 சங்கங்கள் ஏற்க மறுத்ததால் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை வழியாக ஈரோட்டுக்கு நேற்று மதியம் ஒரு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சை அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 47) என்பவர் ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த சரவணன் கண்டக்டராக இருந்தார். இந்த பஸ்சில் 4 பயணிகளே பயணம் செய்தனர்.
அம்மாபேட்டை பவானி ரோட்டை கடந்து கரியகாளியம்மன் கோவில் அருகே பஸ் சென்றபோது திடீரென எதிரே மோட்டார்சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென பஸ் முன்பு மோட்டார் சைக்கிளை குறுக்காக நிறுத்தி வழிமறித்தார். பின்னர் பஸ்மீது கற்களை சரமாரியாக வீசிவிட்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றார். இதனால் பஸ் கண்ணாடி உடைந்தது. இதில் கண்ணாடி துண்டுகள் பட்டு டிரைவர் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை கண்டக்டர் மீட்டு உடனே அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பஸ்டிரைவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் பஸ்மீது கற்களை வீசியவர் நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள சித்தையன் நகரை சேர்ந்த ராமு (46) என்பதும், அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. மேலும் அவர் பவானி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றி வந்த கண்டக்டர் என்பதும் தெரிய வந்தது. இதையொட்டி போலீசார் ராமுவை கைது செய்தனர்.