போக்குவரத்து தொழிலாளர்கள் 4–வது நாளாக வேலை நிறுத்தம்: கிராம மக்கள் அவதி


போக்குவரத்து தொழிலாளர்கள் 4–வது நாளாக வேலை நிறுத்தம்: கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 8 Jan 2018 4:00 AM IST (Updated: 8 Jan 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் 4–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் ஓடாததால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.

ஈரோடு,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. பொதுமக்களுக்கும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் சென்றடைய முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். தொலைதூர பயணம் செல்பவர்கள் 2, 3 பஸ்கள் மாறி செல்ல வேண்டி உள்ளது.

இந்தநிலையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருந்தது. ஆனாலும், ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி 4–வது நாளாக நேற்றும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.

ஈரோடு மாவட்டத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு திரும்பாததால் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டதால் ஒருசில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் வெளியே வரவில்லை. இதனால் ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது. மேலும், பகல் நேரங்களில் இயக்கப்பட்ட அரசு, தனியார் பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக முக்கிய பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி ஓரளவு செய்யப்பட்டு இருந்ததால் பயணிகளுக்கு பெரிதும் சிரமம் ஏற்படவில்லை. ஆனால் கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதி தடைப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மினிபஸ்கள் இயக்கப்படாத பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பஸ்கள் மட்டுமே சென்று வருகின்றன. எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்கள் அவசர தேவைக்காக மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அதிக பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு சென்னிமலைரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


Next Story