‘மந்திர மாங்கல்யா’ முறைப்படி மைசூருவில், இங்கிலாந்து காதல் ஜோடியின் திருமணம் எளிமையாக நடந்தது
மைசூருவில், கன்னட கவிஞர் குவெம்பு கூறியுள்ள ‘மந்திர மாங்கல்யா’ முறைப்படி இங்கிலாந்து காதல் ஜோடியின் திருமணம் மிக எளிமையாக நடந்தது.
மைசூரு,
மைசூருவில், கன்னட கவிஞர் குவெம்பு கூறியுள்ள ‘மந்திர மாங்கல்யா’ முறைப்படி இங்கிலாந்து காதல் ஜோடியின் திருமணம் மிக எளிமையாக நடந்தது.
இங்கிலாந்து காதல் ஜோடிஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பிரிதா வின்சென்ட்(வயது 38). சமூக சேவகி. இவர் தற்போது தென்னிந்திய அளவில், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். இவருக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒலபா மேசன் என்ற தச்சு தொழிலாளிக்கும் இடையே பழக்கம். ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து பிரிதாவும், ஒலபாவும் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.
தற்போது இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கிடையே பிரிதா, கன்னட கவிஞர் குவெம்புவின் புத்தகங்களை விரும்பி படித்தாராம். அப்படி அவர் எழுதிய ‘மந்திர மாங்கல்யா’ என்ற புத்தகத்தை, பிரிதா படித்துள்ளார்.
மந்திரங்கள் இல்லாமல்...அந்த புத்தகத்தில் திருமணத்தின்போது சாஸ்திர, சம்பிரதாயங்கள், வேத, மந்திரங்கள் இல்லாமல், அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓத அக்னி குண்டத்தை சுற்றாமல், ஆடம்பர செலவுகள் இல்லாமல், இரு மனங்கள் இணைந்தாலே போதும் என்று கவிதை நடையில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் அந்த புத்தகத்தில் கவிதை நடையில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
குவெம்புவின் கவிதைகளாலும், அவரின் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளாலும் வெகுவாக ஈர்க்கப்பட்ட பிரிதா, ஆடம்பரம் இல்லாமல், சாஸ்திர, சம்பிரதாயங்கள் இல்லாமல் ‘மந்திர மாங்கல்யா’ முறைப்படி எளிமையாக தனது திருமணத்தை நடத்த முடிவு செய்தார். அதுவும் தனது திருமணத்தை மைசூருவிலேயே நடத்த வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
தாலி கட்டினார்இதுபற்றி அவர் தனது காதலன் ஒலபாவிடம் தெரிவித்தார். அவரும், தனது காதலியின் விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவர்களது திருமணம் மைசூரு டவுன் ஜே.பி.நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மிக எளிமையாக நடந்தது. அப்போது கவிஞர் குவெம்புவின் ‘மந்திர மாங்கல்யா’ புத்தகத்தில் உள்ள திருமண பந்தம் தொடர்பான கவிதையை ஒருவர் படிக்க, தனது காதலி பிரிதாவின் கழுத்தில், ஒலபா தாலி கட்டினார்.
பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இவர்களது திருமணத்தில் 150–க்கும் மேற்பட்டோர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும், புதுமண காதல் தம்பதி பிரிதா–ஒலபாவை வாழ்த்தினர். பின்னர் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
ஒக்கலிகார் பிரிவு‘மந்திர மாங்கல்யா’ முறை கர்நாடகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் தற்போது கவுடா சமூகத்தில் ஒக்கலிகார் பிரிவைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ‘மந்திர மாங்கல்யா’ முறையில் திருமணம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.