2 மூதாட்டிகள் கழுத்தை அறுத்துக்கொலை வளர்ப்பு மகன் உள்பட 2 பேர் கைது
திருவேற்காட்டில் சொத்து தகராறு காரணமாக வளர்ப்பு மகனே, தாய் மற்றும் சித்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது தொடர்பாக வளர்ப்பு மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை திருவேற்காடு மாதிராவேடு, மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் ரங்கநாயகி (வயது 85). இவருக்கு சந்திரா (55) என்ற மகளும், ஏழுமலை (51) என்ற மகனும், பாலகிருஷ்ணன் (45) என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
மகள் சந்திரா, வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன் இருவரும் தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஏழுமலை மட்டும் தனது தாய் ரங்கநாயகி உடன் அதே வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் உறவினருக்கு உடல்நிலை சரிஇல்லாத காரணத்தால் ஏழுமலை, தன்னுடைய மனைவி சமீனாவுடன் நேற்று முன்தினம் ஓசூருக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரங்கநாயகி மட்டும் தனியாக இருந்தார். இதனால் அதே பகுதியில் வசித்து வந்த ரங்கநாயகியின் தங்கை கிருஷ்ணவேணி (75) தனது அக்காளுக்கு துணையாக அந்த வீட்டில் தங்கி இருந்தார்.
கிருஷ்ணவேணியின் வளர்ப்பு மகன் சரவணன். இவர் நேற்று முன்தினம் இரவு ரங்கநாயகி வீட்டுக்கு வந்து தனது வளர்ப்புத்தாய் மற்றும் பெரியம்மா இருவருக்கும் இரவு உணவு, மாத்திரைகள் கொடுத்துவிட்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அக்காள்–தங்கை இருவர் மட்டும் இரவில் வீட்டில் தனியாக இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை இருவருக்கும் உணவு கொடுப்பதற்காக சரவணன் மீண்டும் ரங்கநாயகி வீட்டுக்கு வந்தார். முன்பக்க கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர், வீட்டின் பின்பக்க வாசல் வழியாக செல்வதற்காக அங்கு சென்றார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க அறையில் உள்ள சோபாவில் தனது வளர்ப்பு தாய் கிருஷ்ணவேணி, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் மற்றொரு அறையில் பெரியம்மா ரங்கநாயகியும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அவர் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன் குவிந்தனர். இதுபற்றி திருவேற்காடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ், பூந்தமல்லி உதவி கமிஷனர் ஆல்பிரட் வில்சன், இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் இரட்டைக்கொலை சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த ரங்கநாயகி, கிருஷ்ணவேணி இருவரின் கழுத்து மற்றும் காதில் அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் மாயமாகி இருந்தது. வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ‘ராணி’ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து வேலப்பன்சாவடி வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.
இதையடுத்து போலீசார், கொலையான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரட்டைக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன் குவிந்துவிட்ட நிலையில் வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்த ரங்கநாயகியின் வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன் மட்டும் வராதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, அவர், சொத்து பிரச்சினை காரணமாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதும் தெரியவந்தது.
இது போலீசாருக்கு அவர் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மதுபானக்கடை அருகே நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவருடைய கையில் நகைகளும், ரத்தக்கறை படிந்த சட்டையும் இருந்தது. அவரிடம் விசாரித்தபோது தனது வளர்ப்புத்தாய் ரங்கநாயகி மற்றும் சித்தி கிருஷ்ணவேணி இருவரையும் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்து இருந்த நகைகளை எடுத்து வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த இரட்டைக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய நண்பரான சுந்தரமூர்த்தி என்பவரையும் கைது செய்தனர். மேலும் சொத்து தகராறு காரணமாக ஆவணங்களை எடுக்கச் சென்றபோது இருவரையும் கொலை செய்ததாக போலீசாரிடம் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:–
கொலை செய்யப்பட்ட ரங்கநாயகிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்தாலும், சிறு வயது முதலே பாலகிருஷ்ணனை தத்து எடுத்து வளர்த்து வந்தார். தனது வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்ததுடன், வீட்டுக்கு அருகிலேயே புதிதாக வீடும் கட்டிக்கொடுத்து உள்ளார்.
டிரைவரான பாலகிருஷ்ணன், தனக்கு கொடுத்த நிலத்தை விற்று விட்டார். ஆனாலும் அவர், சொத்தில் தனக்கும் சரி பங்கு உள்ளது என்றும், அண்ணன் ஏழுமலைக்கும், தனக்கும் சரி பங்காக சொத்துகளை பிரித்து தர வேண்டும் என்றும் கூறி பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மேலும் பாலகிருஷ்ணன் பெயரில் அவருடைய தந்தை ஒரு ஏக்கர் நிலம் எழுதி வைத்து உள்ளார். அந்த ஆவணமும் ஏழுமலையிடம்தான் உள்ளது. அந்த ஆவணமும் தேவை என்பதால் அதை தேடி வந்தார். ரங்கநாயகிக்கு ஏழுமலையை விட வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன் மீதுதான் பாசம் அதிகம். வழக்கு சம்பந்தமான ஆவணங்களை எடுக்க பாலகிருஷ்ணன் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஏழுமலை தனது மனைவியுடன் ஓசூர் சென்றுவிட்டதால் வீட்டில் தனது வளர்ப்பு தாயும், சித்தியும் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த பாலகிருஷ்ணன், ஆவணங்களை எடுக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என முடிவு செய்தார்.
இதற்காக அவர், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ரங்கநாயகி வீட்டின் பின்பக்கமாக சென்று கதவை தட்டினார். பாலகிருஷ்ணன் குரலை கேட்டதும் ரங்கநாயகி கதவை திறந்து உள்ளார். தனது கூட்டாளியுடன் வீட்டின் உள்ளே சென்ற பாலகிருஷ்ணன், சொத்து ஆவணங்கள் வைத்து இருக்கும் அறையின் சாவியை கேட்டு தாயிடம் தகராறு செய்தார்.
ஆனால் ரங்கநாயகி, சாவியை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தன்னை வளர்த்த தாய் என்றும் பாராமல் ரங்கநாயகியையும், சித்தி கிருஷ்ணவேணியையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் உள்ள அறையின் கதவில் இருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்தார். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டு நகைக்காக 2 பேரும் கொலை செய்யப்பட்டது போல் போலீசாரை நம்ப வைக்க அவர்கள் அணிந்து இருந்த நகைகளை எடுத்துக்கொண்டார்.
மேலும் போலீசார் தன்னை பிடிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவான ‘ஹார்டு டிஸ்கையும்’ தூக்கிச் சென்றுவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கைதான பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.