மேல்நிலை நீர்தேக்க தொட்டி அகற்றப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு


மேல்நிலை நீர்தேக்க தொட்டி அகற்றப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 8 Jan 2018 4:45 AM IST (Updated: 8 Jan 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள், மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அகற்றப்படுமா? என பள்ளிப்பட்டு பேரூராட்சி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு– சோளிங்கர் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை படிக்கும் மாணவர்கள் உள்ளனர். இந்த பள்ளியை ஒட்டி பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.

இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டியபோது அங்கு தற்போது உள்ள பள்ளி கட்டிடம் இல்லை. அந்த இடம் காலி மைதானமாக இருந்தது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு எதிரே அப்போது அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. அதன் பிறகு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவை பட்டது.

அதனால் காலி மைதானமாக இருந்த இடத்தில் மேல்நிலை பள்ளிக்கான வகுப்பறை கட்டிடங்களும், ஆய்வு கூடங்களும் கட்டப்பட்டன. அப்போது இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் ஆழ்துளை கிணறு தோண்டி மின்மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு, பள்ளிப்பட்டு நகர மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நகர மக்கள் தொகை அதிகமானதால் குடிநீர் தேவையும் அதிகரித்தது.

அதனால் கொசஸ்தலை ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு, அவற்றில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டன. அவற்றில் பெறப்பட்டும் குடிநீரை சேகரித்து வைக்க பஸ்நிலையம் அருகே சித்தூர் சாலையில் ராட்சத மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதன் காரணமாக சோளிங்கர் சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தேவை படிப்படியாக குறைந்தது. மேலும் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே இருந்த கிணறு வற்றிப்போனது. எனவே இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி குறித்து அன்றைய பள்ளிப்பட்டு ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு மக்கள்தொகை பெருகியதால் பள்ளிப்பட்டு ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையும் அதிகரித்ததால் சில இடங்களில் சிறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. இதனால் சோளிங்கர் சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி நாளடைவில் முற்றிலுமாக பழுதடைந்தது. அருகில் இருந்த கிணறும் வற்றியதால் மண் போட்டு மூடப்பட்டது.

ஆனால் பயன்பாடு இல்லாமல் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. அப்படி அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் சூழ்நிலை ஏற்பட்டால், அதன் அருகில் இருக்கும் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களின் மீது தான் விழும்.

இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் பயத்துடனேயே தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இது குறித்து மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழுந்து விபத்து நேரிடுவதற்கு முன்பாக பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பேரூராட்சி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

யாருக்கும், எந்த வித பயனும் இல்லாமல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி உடனடியாக அகற்றப்படுமா? என பேரூராட்சி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


Next Story