கல்வித்துறையின் திட்டங்களில் தொலைநோக்கு பார்வை இல்லை
புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் முதல்–அமைச்சர், அமைச்சர்களால் முடிவு எடுக்க முடியவில்லை, கல்வித்துறையின் திட்டங்களில் தொலைநோக்கு பார்வை இல்லை என அமைச்சர் கமலக்கண்ணன் வேதனயோடு கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் பணி சார்பில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகளப்போட்டி கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:–
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் மூலமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டின் மூலம் கல்வியில் சிறந்து விளங்கலாம். அதேபோல் உடல் ஆரோக்கியமும் மேம்படும். கல்வித்துறையின் திட்டங்களில் தொலைநோக்கு பார்வை இல்லை. இது தற்போது வரை நீடிக்கிறது. இது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது மாணவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள். புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறையின் கீழ் செயல்படும் விளையாட்டுத்துறையின் நல்ல திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க முடியாத நிலை உள்ளது.
நகர் மற்றும் கிராமபுறங்களில் உள்ள பல அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதனால் பள்ளிகளுக்கு அருகே தனியாருக்கு சொந்தமான இடங்கள் இருந்தால், அதனை குறைந்த வாடகைக்கு பெற்று மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டிற்கு கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இந்தாண்டு அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு முதல் தவணையாக ரூ.20 லட்சத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தடகள போட்டிக்கு பெரிய அளவிலான இடங்கள் தேவையில்லை. குறிப்பிட்ட இடத்திலேயே பயிற்சி பெற முடியும். தடகளத்தில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து நல்ல முறையில் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான சத்தான உணவு, உடைகளை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கையை உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சப்படியாக ரூ.125 வழங்கப்படுகிறது. இதனை ரூ.200ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்–அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. அதனையேற்று முதல்–அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை வழங்கினார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் முதல்–அமைச்சரோ, அமைச்சர்களோ முடிவு எடுக்க முடியவில்லை. முதல்–அமைச்சருக்கு எல்லா உரிமைகளும் முழுமையாக இருந்தால் நல்ல திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அன்பழகன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘எல்லா மாநிலங்களிலும் விளையாட்டுக்கு தனி இயக்குனரகம் உள்ளது. புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனி இயக்குனரகம் கிடையாது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் பல முறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நமது மாநிலத்திற்கு விளையாட்டு தனி இயக்குனரகம் வேண்டும்’ என்றார்.முன்னதாக கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். இதில் துணை இயக்குனர் லெனின்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ–மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.