பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்


பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் விடுபட்ட 13 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புகொடியுடன் அரைநிர்வாண போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் 2017–ம் ஆண்டில் மாவட்டத்தில் விடுபட்ட 13 ஆயிரம் விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், வறட்சி நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடியுடன் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, விவசாயிகள் தண்டியப்பன், முத்துராமலிங்கம், சந்திரன், பாகனேரி உடையப்பன் உள்பட ஏராளமான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகள் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த 4 ஆண்டுகளிலும் பருவமழையை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள், தண்ணீரின்றி பயிர்களை காப்பாற்ற முடியாமல் அவதியடைந்தனர். மேலும் பயிர் காப்பீடு செய்தும் இழப்பீட்டு தொகை கிடைக்காமல் மேலும் அவதியுற்றனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் மாவட்டத்தில் சுமார் 13 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story