அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் கரும்பு விவசாயிகள் கைது
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் 71 பேரை போலீசார் கைது செய்தனர்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஆலை நிர்வாகம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகை ரூ.13 கோடியை பொங்கலுக்கு முன்பாக வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.
மேலும் 2017–18ம் ஆண்டிற்கு மாநில அரசு பரிந்துரை செய்யும் விலையை உடனடியாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து ஆலை அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளிக்க உள்ளே சென்று கொடுப்பதற்கு அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி மறுத்து குறிப்பிட்ட நிர்வாகிகளை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக உள்ளே செல்வோம் என்று தடுப்பு கம்பிகளை மீறி செல்ல முயன்றனர்.
இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், ஸ்டாலின்குமார், கதிரேசன், ராஜேந்திரன், போஸ், சோலைமலை, அழகர்சாமி, ராமராஜ், செல்லக்கண்ணு உள்பட 71 பேரை போலீசார் கைது செய்தனர்.