திண்டுக்கல் அருகே கி.பி. 13–ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் அருகே கி.பி. 13–ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவிலை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
திண்டுக்கல்,
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழனியாண்டவர் கலைக்கல்லூரி பண்பாட்டுத்துறை பேராசிரியர்கள் அசோகன், மனோகரன் ஸ்ரீராஜா மற்றும் மாணவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள பாடியூரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:–
பாடியூரின் கிழக்கு பகுதியில் உள்ள எழுத்துப்பாறையில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதன் அருகே கி.பி. 13–ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு சிதைந்த நிலையில் கிடந்தது. அது பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனின் காலத்தை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்த ஒரு சிவன் கோவில் பற்றியும், அந்த கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்தும் அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவகன்மிகள் (கோவில் ஊழியர்கள்) மற்றும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிவன் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளித்து, அந்த நிலத்துக்கான குடிமை, கடமை வரி ஆகியவற்றை நீக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு கணக்கு எழுதியவர் கூத்தாண்டானான தென்னவன் என்பதும் இந்த கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஊரை சேர்ந்த பலருடைய பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதில் அவேளான், கூத்தன், படிபுத்திரன், ஆறும்பாடியான் ஆகிய பெயர்கள் மட்டும் அழியாமல் தெளிவாக உள்ளது. மற்ற பெயர்கள் அழிந்து உள்ளன. எழுத்துக்களை முழுமையாக படிக்க முடியாத அளவுக்கு அந்த கல்வெட்டு சிதைந்துள்ளதால், கோவில் பற்றிய முழுமையான விவரங்களை அறிய முடியவில்லை. இந்த கல்வெட்டு மூலம் அது சிவன் கோவில் என்பதும், அதற்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெரிகிறது. கல்வெட்டின் அருகே இந்த நிலமும், கல்வெட்டும் சிவன் கோவிலுக்கு உரித்தானது என்பதற்கு அடையாளமான ஒரு திரிசூல சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
எழுத்துப்பாறையின் மேற்கு புறம் மேற்கொண்ட ஆய்வில் சிவன் கோவிலின் சிதிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் முருகன், நந்தி மற்றும் பைரவர் ஆகிய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முருகன் சிலையின் கைப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்த சிதிலங்கள் மூலம் இந்த கோவில் மரக்கட்டைகள் மற்றும் செங்கல் கொண்டு கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் கோவிலில் கல்வெட்டை பொறிக்க இயலாமல் அருகில் இருந்த பாறையில் பொறித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.