போக்குவரத்து தொழிலாளர்கள் 5–வது நாளாக வேலைநிறுத்தம் கிராமங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு


போக்குவரத்து தொழிலாளர்கள் 5–வது நாளாக வேலைநிறுத்தம் கிராமங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2018 3:30 AM IST (Updated: 9 Jan 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 5–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கிராமங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிராம மக்கள் தவித்தனர்.

ஊட்டி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், வெளியூர்களுக்கு செல்கிறவர்கள், அலுவலக பணிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் 5–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதனால் அரசு பஸ்கள் தற்காலிக ஊழியர்களை வைத்து இயக்கப்பட்டன. முன் அனுபவம் இல்லாமலும், பஸ் வழித்தடம் தெரியாமலும் தற்காலிக ஊழியர்கள் திணறி வருகின்றனர். அவர்களுக்கு எந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தினமும் விளக்கி வருகிறார்கள்.

மலைப்பாதையில் தற்காலிக ஊழியர்கள் அரசு பஸ்களை இயக்கும் போது, அபாயகரமான நிலையில் ஓட்டுகின்றனர். இது பயணிகளை பீதி அடைய செய்து உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர். நீலகிரிக்கு நேற்று ஊட்டி–1, ஊட்டி–2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்–2 ஆகிய 6 பணிமனைகளில் இருந்து மொத்தம் 281 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும், ஊட்டியில் இருந்து அணிக்கொரை, மேல்குந்தா உள்பட பல்வேறு கிராமங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. உரிய நேரத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் தவித்தனர். இதன் காரணமாக ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் பஸ் எப்போது வரும்? என்று பஸ்சின் வருகைக்காக நீண்டநேரம் காத்திருந்தனர். பஸ் வந்ததும் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு பஸ்சில் ஏறி தங்களது கிராமங்களுக்கு சென்றனர்.

இதற்கிடையே ஊட்டிக்கு வந்த அரசு பஸ்களில் நேற்று கோவை மண்டல அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என்று நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது.


Next Story