மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிக்கு இணையதள இணைப்பு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் அளிக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியகுழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இரவு நேர தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். வட்ட தலைவர் செந்தில் கண்ணன், செயலாளர் பிரகாஷ், மகளிர் அணி தலைவி தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தர்ணா போராட்டம் காலை 6 மணிக்கு முடிவடைந்தது. முடிவில் வட்ட பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.

ராசிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ராசிபுரம் தாலுகாவில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் நேற்று இரவு 7.45 மணியளவில் தொடங்கிய இந்த உள்ளிருப்பு போராட்டம் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை நடைபெறும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர். உள்ளிருப்பு போராட்டத்தில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று திருச்செங்கோட்டிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story