பஸ் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு போலீசாருடன் வாக்குவாதம்


பஸ் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் பஸ் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் போலீசாருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 4-ந் தேதி இரவு முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலும் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. 65 சதவீத டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வரவில்லை. மாற்று ஏற்பாடாக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். கரூர் பஸ் நிலையம் அருகே ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த பஸ் ஊழியர்கள் நேற்று காலை ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு திரண்டனர். பாதுகாப்பு பணிக்காக கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிருத்விராஜ், செந்தில்குமார், செந்தில்குமரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக போலீசாரிடம் கூறினர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும், எனவே கலைந்து செல்லும்படியும் போலீசார் கூறினர். ஆனால் பஸ் ஊழியர்கள் கலைய மறுத்தனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் ஆகியோர் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் கூறினர். இதைதொடர்ந்து பஸ் ஊழியர்கள் அடுத்த கட்ட ஆலோசனையில் ஈடுபட போகிறோம் என கூறி அனைவரும் அங்கிருந்து கலைஞர் அறிவாலயம் புறப்பட்டு சென்றனர். அங்கு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த பஸ் ஊழியர்கள் திரண்டதால் சிறிது நேரம் பஸ் நிலையம் அருகே நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story