சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு


சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 9 Jan 2018 4:15 AM IST (Updated: 9 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதில் கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் சாயம் மற்றும் சலவை ஆலைகளில் இருந்து வெளியேறிய சாயக்கழிவு நீரால் விவசாய நிலங்கள் முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

கடந்த 2003, 2004-ம் ஆண்டு மத்திய இழப்பீட்டு ஆணையம் குழு அமைத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது. அதன்படி சாயப்பட்டறை, சலவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.6 கோடியே 36 லட்சம் பெற்று தர வேண்டும். ஆனால் ரூ.36 லட்சம் மட்டும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிமையாளர்கள் செலுத்தினர். மேலும் நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றனர்.

அந்த தடை ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் இன்னும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2004-ம் ஆண்டு முதல் மீண்டும் சாயக்கழிவு நீரை விவசாய நிலங்களில் பாய்ச்சி வருகின்றனர். 2004 முதல் 2017-ம் ஆண்டு வரையிலும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு சில ஆலைகள் அமராவதி ஆற்றில் இரவு நேரங்களில் சாயக்கழிவை திறந்து விடுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் வருகிற 26-ந் தேதி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல அரவக்குறிச்சி அருகே கூடலூர் மேல்பாகம் கிராமத்தில் தனியார் சிமெண்டு பைப் தொழிற்சாலை அமைக்க பணிகள் நடந்து வருவதாகவும், ஆலை வந்தால் கிராமம் பாதிக்கப்படும் எனவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் வேன் ஊழியர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், “மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேனில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்களுக்கு தங்கும் வசதி வேண்டும். குறைபாடுகள் உள்ள வேன்களை மாற்ற வேண்டும். கரூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வேன் நிர்ணயிக்கப்பட்ட கிலோ மீட்டரை தாண்டி இயக்கப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கரூர் மாவட்டத்தில் 14 ஆம்புலன்ஸ் வேன்கள் சரிவர இயங்குவதில்லை. 4 ஆம்புலன்ஸ் வேன்கள் இரவு நேரத்தில் இயங்குவதில்லை எனவே உரிய நடவடிக்கை எடுத்து குறைபாடுகளை களைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரங்களை உரிய அனுமதி இல்லாமல் வெட்டிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் பள்ளி மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என மற்றொரு முன்னாள் மாணவர்கள் தரப்பில் மனு கொடுத்தனர். ஆதிதமிழர் பேரவையினர் சார்பில் அளித்த மனுவில், “தாந்தோன்றிமலை ஒன்றியம் வெட்டுக்காட்டுபுதூர் காலனியில் ஆழ்குழாய் கிணற்றுடன் பொருத்தப்பட் டுள்ள மின் மோட்டார் பழுதடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தேசிய அளவில் தடகளம் மற்றும் குழு போட்டிகளில் சாதனை படைத்த 21 மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார். மேலும் 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும், 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார். 

Next Story