சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் திவாகரன் பேட்டி


சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் திவாகரன் பேட்டி
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் என்று முத்துப்பேட்டையில் திவாகரன் கூறினார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு வந்த சசிகலா தம்பி திவாகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள எடப்பாடி அரசு மக்களிடையே தோல்வி அடைந்துவிட்டது. காவிரியிலிருந்து டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லை. ஒருமுறை மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மணல் குவாரி நிறுத்தப்பட்டதால் கட்டுமானப்பணியாளர்கள் முற்றிலும் வேலையிழந்துவிட்டனர். போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் இந்த அரசு தீர்வு காணவேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசு என்று ஒன்று உள்ளதா என தெரியவில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அதனால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் யார் கொண்டுவந்தாலும் அதனை நாங்கள் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளோம்.

அரசு போக்குவரத்துக்கழகம், மின்வாரியத்துறை தோல்வி அடைந்துவிட்டது மட்டும் அல்லாமல் தற்போது சுகாதாரத்துறையும் தோல்வி அடையத்தொடங்கி விட்டது. நிதிப்பற்றாக்குறையால் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு வழங்கப்படவேண்டிய 2,500 புதிய பஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தாலும், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பிறகு அதனை நடத்துவதற்கு யோசிக்கும் நிலை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு திவாகரன் கூறினார்.

பேட்டியின் போது மன்னார்குடி முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கோவிலூர் ஜெகன், ஒன்றிய செயலாளர் அய்யாத்தேவர், நகர செயலாளர் லக்கி நாசர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story