தூத்துக்குடியில் இருந்து என்ஜின் ஆயில் வினியோகஸ்தர் காரில் கடத்தல் நெல்லை ஆயில் கம்பெனி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


தூத்துக்குடியில் இருந்து என்ஜின் ஆயில் வினியோகஸ்தர் காரில் கடத்தல்  நெல்லை ஆயில் கம்பெனி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2018 2:00 AM IST (Updated: 9 Jan 2018 7:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் என்ஜின் ஆயில் வினியோகஸ்தரை பணம் கேட்டு காரில் கடத்திய, நெல்லை ஆயில் கம்பெனி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் என்ஜின் ஆயில் வினியோகஸ்தரை பணம் கேட்டு காரில் கடத்திய, நெல்லை ஆயில் கம்பெனி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயில் வினியோகஸ்தர்

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பிரான்சிஸ் குமார் (வயது 37). இவர் மோட்டார் சைக்கிள் என்ஜின்களுக்கு ஊற்ற பயன்படும் தனியார் நிறுவன ஆயில் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி பவுலா (33). தனியார் பள்ளி ஆசிரியை.

காரில் கடத்தல்

நேற்று முன்தினம் காலையில் பிரான்சிஸ் குமார் தனது மகனை அந்த பகுதியில் உள்ள பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது அந்த பகுதியில் வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய சிலர், அவரிடம் பேசினர். திடீரென அவர்கள் பிரான்சிஸ் குமாரை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

இதுகுறித்து பள்ளி அருகே நின்ற சிலர் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இருப்பினும் அந்த கார் காலை 10.30 மணிக்கு வாகைகுளம் சுங்கசாவடியை கடந்து நெல்லை நோக்கி சென்றது. இது அந்த சுங்கசாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

ஆயில் கம்பெனி

அந்த காரின் எண்ணை கொண்டு ஆய்வு செய்த போது அந்த கார், நெல்லை வண்ணார்பேட்டையில் என்ஜின் ஆயில் கம்பெனி நடத்தி வரும் மானூரை சேர்ந்த ஹென்றிசன் (31) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து நெல்லை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வண்ணார்பேட்டையில் உள்ள ஆயில் கம்பெனியில் இருந்த அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், ஹென்றிசனிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு பிரான்சிஸ்குமார் ஆயில் வாங்கி விற்பனை செய்து வந்தார். இதில் சுமார் ரூ.42 ஆயிரம் ஹென்றிசனுக்கு அவர், கொடுக்க வேண்டுமாம். ஆனால் அந்த பணத்தை கொடுக்காமல் அவர், காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி வந்த ஹென்றிசன், அவரை காரில் கடத்தி சென்று, பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹென்றிசன், அவருடைய ஆதரவாளர் துரைமுகம் (35) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

பின்னர் அவர்களை தூத்துக்குடி அழைத்து வந்தனர். போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த முருகன் (25), மாரிமுத்து (25) மற்றும் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த முருகன் (52) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story