ஒரத்தநாட்டில் ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒரத்தநாட்டில் ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நேற்று ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சீனி.முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில துணைத்தலைவர் லிங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காட்டில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.