திருச்சியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
திருச்சியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பணிக்கு திரும்புமாறு 4,500 பேருக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
திருச்சி,
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந்தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று 6–வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இந்தநிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் நேற்று மதியம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் கூடி போராட்டம் நடத்தினர்.
அப்போது கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டத்தினர் மத்தியில், தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் மேஜை போட்டு அதன்மீது ஏறி நின்றுகொண்டு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட தொகையை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்துகொண்டனர்.
போராட்டம் மதிய நேரத்தில் நடைபெற்றதால், பள்ளி முடிந்து வந்த தங்கள் குழந்தைகளை பள்ளி சீருடையிலேயே சிலர் அழைத்து வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது.
நேற்று குடும்பத்துடன் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் அதை மீறி போராட்டம் நடந்தது. இதனால் சம்பவ இடத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
6–வது நாள் நடந்த இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் காலையில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பின்னர் மதியத்தில் இருந்து அதிகளவு பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மாநகர் பகுதிகளில் குறைவான அளவே அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் அரசு டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோன்று தனியார் டவுன் பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு வழக்கமானதை விட அதிகளவில் தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு போக்குவரத்து கழகத்தில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 4,500 பேருக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதில் பலரின் வீடுகளுக்கே சென்று நோட்டீசு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். நோட்டீசில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் உடனே வேலைக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம், கேட்டதற்கு ‘‘ உடனே வேலைக்கு திரும்ப வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து பலருக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது’’ என்றனர்.