ரே ரோட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து
ரே ரோட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 கடைகள் எரிந்து நாசமாகின.
மும்பை,
மும்பை ரே ரோடு குடிசை பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் இரவு 11.50 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கும் பரவி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு பதறி அடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர்.உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆறு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் உள்ள ஏழு கடைகள் எரிந்து நாசமாகின.
தகவல் அறிந்து வந்த போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதில் அங்குள்ள ஒருகடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இருந்து மும்பை நகரம் தொடர்ச்சியாக பெரும் தீ விபத்துக்களை சந்தித்து வருகிறது.
டிசம்பர் 18–ந் தேதியில் இருந்து கடந்த 6–ந் தேதி வரையிலான 20 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து சாக்கிநாக்கா, லோயர்பரேல், மரோல், காஞ்சூர்மார்க் ஆகிய இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story