போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம் போலீசார் குவிப்பு
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தனர். அப்போது பொதட்டூர்பேட்டையில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த அரசு பஸ்சை அவர்கள் வழி மறித்தனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 15 நிமிம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் தங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.