பாகிஸ்தானை சேர்ந்தவர் இந்திய குடியுரிமை பெற உதவ வேண்டும்


பாகிஸ்தானை சேர்ந்தவர் இந்திய குடியுரிமை பெற உதவ வேண்டும்
x
தினத்தந்தி 11 Jan 2018 2:44 AM IST (Updated: 11 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானை சேர்ந்தவர் இந்திய குடியுரிமை பெற உதவுமாறு மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசிப் கராடியா (வயது 52) என்பவர், பாஸ்போர்ட்டு இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மும்பையில் வசித்து வருகிறார். எனவே, இவர் பாகிஸ்தான் திரும்புமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதேசமயம், இந்தியாவை விட்டு வெளியேற மறுத்த இவர், தனக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தார்.

மேலும், இவரது விசா செல்லுபடியாகும் காலம் முடிவடைந்ததால், பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்யாமல், விசா கால அவகாசத்தை நீட்டிக்க மறுப்பு தெரிவித்தது. எனவே, தனக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆசிப் கராட்டிய மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

நான் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் பிறந்தாலும், பிறந்து சில நாட்களிலேயே என்னை எனது தாய் இந்தியா அழைத்து வந்துவிட்டார். என்னிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டோ அல்லது பாகிஸ்தான் அரசு வினியோகிக்கும் வேறு எந்தவொரு ஆவணமுமோ கிடையாது.

பிரிவினைக்கு முன்பாகவே என்னுடைய பெற்றோர் குஜராத்தில் பிறந்தவர்கள். என்னுடைய மனைவியும், 3 பிள்ளைகளும் இந்திய குடிமக்கள். நான் மும்பையில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். வரி செலுத்துகிறேன்.

பாஸ்போர்ட்டு தவிர இந்திய அரசின் ஆதார் அட்டை, ரே‌ஷன் அட்டை, நிரந்தர கணக்கு எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறேன். இந்திய குடியுரிமை கோரி நான் தாக்கல் செய்த விண்ணப்பம், 7 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இதனை வினியோகிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.போர்தி மற்றும் ராஜேஷ் கேத்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இந்திய குடியுரிமை பெற உதவுமாறு மராட்டிய அரசுக்கு பரிந்துரை செய்தனர். மேலும், அவர் இந்திய குடியுரிமை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து 2 வாரத்துக்குள் பிரமாணப்பத்திரம் வாயிலாக பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story