இறுதி பட்டியல் வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 354 வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 354 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:15 AM IST (Updated: 11 Jan 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு 5 லட்சத்து 39 ஆயிரத்து 354 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டார். பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2018, 3.10.2017 முதல் 15.12.2017 வரை நடைபெற்றது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட நபர்கள் மற்றும் 1.1.2018 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலனை செய்யப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3.10.2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் (தனி) தொகுதியில் 2,82,862 வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 2,59,683 வாக்காளர்களும் என மொத்தம் 5,42,545 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

சிறப்பு முகாம்கள்

பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியில், 1.1.2018-ஐ தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர், முகவரி போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் 3.10.2017 முதல் 15.12.2017 வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

வாக்காளர்கள் நீக்கம்

முகாமில் பெரம்பலூர் (தனி) தொகுதியில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களில் 2,151 ஆண் வாக்காளர்களும், 2,143 பெண் வாக்காளர்களும் மற்றும் இதர 2 என மொத்தம் 4,296 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் நீக்கல் தொடர்பாக 2,072 ஆண் வாக்காளர்களும், 3,641 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5,713 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குன்னம் தொகுதியில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களில் 1,798 ஆண் வாக்காளர்களும், 1,802 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 3,600 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் நீக்கல் தொடர்பாக 2,040 ஆண் வாக்காளர்களும், 3,334 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5,374 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவா, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன் (பெரம்பலூர்), தமிழரசன் (குன்னம்), சீனிவாசன் (ஆலத்தூர்), பாரதிவளவன் (வேப்பந்தட்டை) உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story