தொழிலாளர் நல அலுவலகத்தை போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று சுமார் 86 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இது ஒருபுறம் இருக்க போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று காலையில் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் ள்ள தொழிலாளர் நல அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகை போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் ரவிமுருகன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 300–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.