மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 6 சட்டமன்ற தொகுதிகளில் 13.62 லட்சம் வாக்காளர்கள்


மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 6 சட்டமன்ற தொகுதிகளில் 13.62 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:15 AM IST (Updated: 11 Jan 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 62 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக 9 ஆயிரத்து 985 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 33,848 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் இந்த பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 3.10.2017 முதல் 15.12.2017 வரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டும், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

33,848 பேர் நீக்கம்

3.10.2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 13 லட்சத்து 85 ஆயிரத்து 899 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரத்து 985 பேர் புதிதாக சேர்க்கப்பட்டும், 33,848 பேர் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 93 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 95 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 116 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 62 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண்கள் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 734 பேர் அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி வாரியாக

ராசிபுரம் சட்டசபை தொகுதியை பொறுத்த வரையில் புதிதாக 1,733 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 1,596 பேரும், நாமக்கல் தொகுதியில் 1,804 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 1,751 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 1,632 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 1,469 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராசிபுரம் சட்டசபை தொகுதியில் திருநங்கை வாக்காளர்கள் எவரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட அரசு துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு கோட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை நேற்று திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது அரசியல் கட்சி பிரமுகர்கள், தாசில்தார்கள் பூவராகவன் (திருச்செங்கோடு), ரகுநாதன் (குமாரபாளையம்), ருக்மணி (பரமத்தி வேலூர்), திருச்செங்கோடு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், தேர்தல் துணை தாசில்தார்கள் சுப்பிரமணியம் (திருச்செங்கோடு), இன்னொரு சுப்பிரமணியம் (குமாரபாளையம்), தங்கம் (பரமத்தி வேலூர்) ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story