தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 7-வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்


தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 7-வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:15 AM IST (Updated: 11 Jan 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 7-வது நாளாக தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தர்மபுரியில் உள்ள தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி 7-வது நாளாக நேற்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கம் குறைந்தது.

தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் 60 சதவீத அளவில் இயக்கப்பட்டன. மாற்று டிரைவர்கள் மூலமாகவும், தற்காலிக டிரைவர்கள் மூலமாகவும் அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

முற்றுகை

இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தர்மபுரி இலக்கியம்பட்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story