தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பா.ம.க.வினால் மட்டுமே நிரப்ப முடியும் - டாக்டர் ராமதாஸ்


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பா.ம.க.வினால் மட்டுமே நிரப்ப முடியும் - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:45 AM IST (Updated: 11 Jan 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற அரசியல் வெற்றிடத்தை பா.ம.க.வினால் மட்டுமே நிரப்ப முடியும் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அரிகரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

இன்றைக்கு மாற்றத்தை நோக்கி ஒவ்வொரு நிமிடமும் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அரசியலும் அப்படித்தான். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்படி மறைந்தார்? என்று ஒரு விசாரணை கமி‌ஷன். அவர் உயிரோடு இருந்திருந்தால் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்திருப்பார். 100 கோடி ரூபாய் அபராதமும் செலுத்தியிருப்பார். அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்கள். உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் நோபல் பரிசு கொடுப்பார்கள். அதுவும் அமைதி, இலக்கியம், புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு கொடுப்பார்கள். தமிழக மக்கள் விவரம் தெரியாதவர்களா?

வியாபாரிகள், கடையில் வியாபாரம் முடிந்து இரவில் கல்லா கட்டுவதைப்போல் ஆட்சியாளர்கள் முடிந்தவரை கல்லாகட்டுகின்றனரே தவிர மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. தற்போது பொங்கல் பண்டிகை வேளையில் பஸ்கள் ஓடாமல் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. பணம் கொடுத்தால்போதும், நமக்கு வாக்களிப்பார்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன மருந்துகளை உபயோகிக்க வேண்டும் என்றுகூட இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியாது. டெல்லியில் உள்ள எய்ம்சில் இருந்து வந்த குழுவினர், டெங்குவை கட்டுப்படுத்த சரியான தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை, தவறான நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள் என்று விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு பைசா கூட செலவில்லாத கல்வி, மருத்துவத்தை கொடுப்போம். அறிவுசார்ந்த கல்வியை கொடுத்து அதற்கேற்ற வேலையை கொடுப்பதுதான் அரசின் கடமை. ஆனால் அரசு இதை செய்யவில்லை. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் 22 மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. அந்த சட்டம் கொண்டு வந்தால் முதல்–அமைச்சர், அமைச்சர்கள் யார் ஊழல் செய்தாலும் விசாரணை நடக்கும், அவர்களுக்கு 6 மாதத்தில் தண்டனை கொடுக்கப்படும். அதனால்தான் இதை தமிழகத்தில் கொண்டு வரவில்லை.

இன்றைக்கு விவசாய விளைநிலங்களை கூறுபோட்டு வீட்டுமனைகளாக்கி வருகின்றனர். விவசாயிகள் வாழ முடியாமல் தவிக்கிறார்கள். விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடியை 3 ஆண்டுகளாக கொடுக்கவில்லை. இதை விவசாயிகளுக்கு பெற்றுத்தர அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளை பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை. பா.ம.க. பசுமை கட்சி என்பதால் விவசாயிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் போட்டு வருகிறோம்.

தமிழகத்தில் ஒரு பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி தொடர அனுமதிக்கக்கூடாது. 2 திராவிட கட்சிகளையும் வேரோடு அகற்றும் பணியை காலதேவன் நமக்கு கொடுத்திருக்கிறான். தற்போது அரசியலில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கோட்டைக்கு போவதற்கு இதுதான் தருணம். அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பா.ம.க.வினால் மட்டுமே முடியும். அதற்காக ஆற்றல்மிக்க, செயல்திறன் மிக்க இளம் தலைவர் அன்புமணியை பா.ம.க. கொடுத்திருக்கிறது. இவருக்கு இணையாக சொல்வதற்கு இன்றைக்கு வேறு யாரும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாவட்ட தலைவர் ஆதிநாராயணன்யாதவ், முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை முழுவதையும் அரசு உடனே வழங்க வேண்டும், ஆறுகளில் தடுப்பணை கட்டும் பணியை அனைத்துக்கட்சிகள் உள்ளடக்கிய விவசாய சங்கத்திடம் கொடுத்து தரமான முறையில் கட்ட வேண்டும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக முதல்–அமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்த பின்னர் டாக்டர் ராமதாஸ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

போக்குவரத்து தொழிலாளர்களை பற்றியும், மக்களை பற்றியும் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. 50 சதவீத பஸ்கள் காயலாங்கடைக்கு செல்லும் நிலையில் உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்டதை கொடுக்க வேண்டும். எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் ஒன்றும் நடக்காது. மக்கள் தெளிவாக அன்புமணி பின்னால் உள்ளனர். ஒருவர் கொள்கையை பற்றி கேட்டால் தலைசுற்றுகிறது என்கிறார். 91 எம்.எல்.ஏ.க்களை வைத்து என் நண்பர் கருணாநிதி, எங்கள் ஆதரவோடு ஆட்சி நடத்தினார். இன்று 98 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியவில்லை. பா.ம.க.விடம் மட்டும் அப்படி எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மக்கள் நலன் சார்ந்தவற்றை அரசுக்கு ஆலோசனையாக சொல்லியிருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story