இடம் ஒதுக்கியும் கட்டிடம் கட்டப்பட வில்லை 30 ஆண்டுகளாக சொந்த கட்டிடம் இல்லாமல் இயங்கும் ஓட்டேரி போலீஸ் நிலையம்


இடம் ஒதுக்கியும் கட்டிடம் கட்டப்பட வில்லை 30 ஆண்டுகளாக சொந்த கட்டிடம் இல்லாமல் இயங்கும் ஓட்டேரி போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 11 Jan 2018 5:04 AM IST (Updated: 11 Jan 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

30 ஆண்டுகளாக சொந்த கட்டிடம் இல்லாமல் ஓட்டேரி போலீஸ் நிலையம் இயங்குகிறது. இடம் ஒதுக்கியும் கட்டிடம் கட்டப்பட வில்லை.

வண்டலூர்,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1927–ம் ஆண்டு கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது. இந்த போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வண்டலூர், ஓட்டேரி, கொளப்பாக்கம், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, நந்திவரம், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் போன்ற பல்வேறு ஊர்கள் இருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1985–ம் ஆண்டு வண்டலூரில் உள்ள காப்பு காட்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை மறைந்த முதல் –அமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது இருந்த அரசு 1987–ம் ஆண்டு வண்டலூர்–கேளம்பாக்கம் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் ஓட்டேரி போலீஸ் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. அப்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் தலைமையில் இயங்கியது. இதனுடைய முழு கட்டுப்பாடுகள் அனைத்தும், கூடுவாஞ்சேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

22 ஆண்டு காலமாக ஓட்டேரி போலீஸ் நிலையம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில்தான் இயங்கியது. திடீரென கடந்த 2009–ம் ஆண்டு வனத்துறை அதிகாரி சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ஒட்டேரி போலீஸ் நிலையம் உள்ள இடத்தில் விலங்குகள் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பதால், உடனே போலீஸ் நிலையத்தை காலி செய்து தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஓட்டேரி போலீஸ் நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்காக வண்டலூர் ஊராட்சியில் பல்வேறு இடங்களை பார்த்தார்கள், ஆனால் போலீஸ் நிலையத்திற்கு ஏற்ப எந்த இடமும் கிடைக்கவில்லை, ஆனால் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், ஓட்டேரி போலீஸ் நிலையத்தை காலி செய்வதற்காக அழுத்தத்தை கொடுத்து வந்தனர்.

இதன் காரணமாக கடந்த 2010–ம் ஆண்டு வண்டலூர்–வாலாஜாபாத் சாலையில் அமைந்துள்ள மண்ணிவாக்கம் கிராமத்தில் சுமார் 49 ஆண்டுகளுக்கு முன்பு 2.4.1961–ம் ஆண்டு சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தாய் சேய் நல விடுதியில் ஓட்டேரி போலீஸ் நிலையத்தை இடம் மாற்றி அமைக்க போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு எடுத்தனர். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து அதே ஆண்டு 17.2.2010–ம் ஆண்டு அப்போது இருந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்ஹா இடம் மாற்றி அமைக்கப்பட்ட ஓட்டேரி போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

அதன் பிறகு சுமார் 7 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை தாய் சேய் நல விடுதியில்தான் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. புதிய போலீஸ் நிலையம் கட்டுவதற்காக தற்போது உள்ள போலீஸ் நிலையம் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த இடம் ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு சொந்தமானது என்று உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:–

ஓட்டேரி போலீஸ் நிலையம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகியும் சொந்த கட்டிடம் இல்லை, எந்த அரசும் கட்டுவதற்கு முன்வரவில்லை, இதற்கு காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை, கடந்த 7 ஆண்டுகளாக மண்ணிவாக்கம் தாய் சேய் நல விடுதியில் இயங்கி வரும் போலீஸ் நிலையத்திற்கு அருகே புதிய போலீஸ் நிலையம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. அந்த இடம் ஒதுக்கி சுமார் 3½ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த இடத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க முயற்சி எடுக்கவில்லை, தற்போது இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையத்திற்கான விருதுகள் பெறும் தமிழக அரசு, இந்த சிறப்பான நேரத்திலாவது ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீஸ் அதிகாரி கூறுகையில்:–

ஒட்டேரி போலீஸ் நிலையம் தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல்தான் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். தாய் சேய் நலவிடுதி என்பது பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான கட்டிடம் ஆகும். அந்த கட்டிடத்தில் போலீஸ் நிலையம் இருப்பது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லாமல், இந்த தாய் சேய் நல விடுதியில் போலீஸ் நிலையத்தை இயக்கி வருகிறோம். போலீஸ் நிலையம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய போலீஸ் நிலையம், நவீன வசதிகளுடன் கட்டுவதற்கான முயற்சிகளை உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story