சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பெரும்அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் சென்றது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையை சேர்ந்த பழனியாண்டி (வயது 37) என்பவரும் அந்த விமானத்தில் செல்ல வந்திருந்தார்.
அவருடைய உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் கொண்டு வந்திருந்த சூட்கேசில் ரகசிய அறை இருப்பதையும், அதை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
ரூ.5 லட்சம் மதிப்புள்ள அந்த அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பழனியாண்டியின் விமான பயணத்தை ரத்து செய்தனர். இந்த அமெரிக்க டாலர்களை அவர் யாருக்காக சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றார்?, அது ஹவாலா பணமா? என பழனியாண்டியிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.